25 சதவீத போனஸ் வழங்க வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நாகையில் நடந்தது

25 சதவீத போனஸ் வழங்க வலியுறுத்தி நாகையில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-10-22 23:00 GMT
நாகப்பட்டினம்,

அரசு அனைத்து போக்குவரத்துகழக ஊழியர்கள் சங்கம் சார்பில் நேற்று நாகையில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சம்மேளன குழு பொறுப்பாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். அரசு விரைவு போக்குவரத்து கழக சம்மேளன குழு பொறுப்பாளர் முருகையன் முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் சீனிமணி கலந்துகொண்டு பேசினார்.

25 சதவீத போனசை அனைத்து ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும். 240 நாட்கள் பணி முடித்த அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் திரளான போக்குவரத்து ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேதாரண்யம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு தொழிலாளர் முன்னேற்ற சங்கம், ஐ.என்.டி.யூ.சி. பாட்டாளி மக்கள் கட்சி தொழிற்சங்கம், அம்பேத்கர் தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மேலும் செய்திகள்