என்ஜினீயர் கோகுல்ராஜ் கொலை வழக்கு: நாமக்கல் கோர்ட்டில் 4 பேர் சாட்சியம்

என்ஜினீயர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் நேற்று நாமக்கல் கோர்ட்டில் 4 பேர் சாட்சியம் அளித்தனர்.

Update: 2018-10-22 22:15 GMT
நாமக்கல்,

சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் என்ஜினீயர் கோகுல்ராஜ் (வயது 23). இவரது கொலை தொடர்பான சாட்சி விசாரணை நாமக்கல் முதன்மை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இதுவரை கோகுல்ராஜின் தாயார் சித்ரா, சகோதரர் கலைச்செல்வன், கோகுல்ராஜின் தோழி சுவாதி, அவரது தாயார் செல்வி உள்பட 22 பேர் சாட்சியம் அளித்து உள்ளனர்.

இந்த வழக்கு விசாரணை நேற்று நீதிபதி இளவழகன் முன்னிலையில் நடைபெற்றது. இதையொட்டி இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு உள்ள சங்ககிரியை சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் தவிர மீதமுள்ள 14 பேரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

நேற்று முதல் சாட்சியாக கோகுல்ராஜ் படித்த தனியார் கல்லூரியின் பேராசிரியர் பெரியசாமி சாட்சியம் அளித்தார். அவரை தொடர்ந்து அர்த்தனாரீஸ்வரர் கோவிலில் டிக்கெட் வழங்கும் பணியாளர் தங்கவேல், லாரி டிரைவர் தாசன், பத்ரகாளியம்மன் கோவில் இரவு காவலாளி ஜெகநாதன் என மொத்தம் 4 பேர் சாட்சியம் அளித்தனர்.

இதையடுத்து நீதிபதி இளவழகன் இந்த வழக்கு விசாரணையை வருகிற 30-ந் தேதிக்கு ஒத்திவைத்தார். இவர்களில் டிரைவர் தாசன், இரவு காவலாளி ஜெகநாதன் ஆகிய இருவரும் கொடுத்த சாட்சியம் திருப்திகரமாக இல்லை என அரசு தரப்பு வக்கீல் கருணாநிதி கூறினார்.

பாதுகாப்புக்கு போதிய போலீஸ் இல்லாததால் நேற்று யுவராஜ் திருச்சி சிறையில் இருந்து கோர்ட்டுக்கு அழைத்து வரப்படவில்லை என நீதிமன்ற வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்