கல்லூரியில் இருந்து நீக்கப்பட்ட மாணவரை மீண்டும் சேர்க்கக்கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் சாலை மறியல்

திருவாரூர் திரு.வி.க. அரசு கல்லூரியில் இருந்து நீக்கப்பட்ட மாணவரை மீண்டும் சேர்க்கக்கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2018-10-23 22:15 GMT
திருவாரூர்,

திருவாரூர் கிடாரங்கொண்டானில் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடிநீர் பிரச்சினை சம்பந்தமாக போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் கல்லூரி மாணவர்களை தூண்டிவிட்டு, கல்லூரி செயல்பாட்டிற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதாக மாணவர் மாரிமுத்துவை நீக்கம் செய்து கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

இதனையடுத்து மாணவர் மாரிமுத்து நீக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் வருகிற 27-ந் தேதி வரை கல்லூரிக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டது.

இந்த நிலையில் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்தும், நீக்கப்பட்ட மாணவர் மாரிமுத்துவை மீண்டும் கல்லூரியில் சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் நேற்று இந்திய மாணவர் சங்கம் சார்பில் கல்லூரி முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவாரூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் மறியலை கைவிட்டு மாணவ-மாணவிகள் கலைந்து சென்றனர். இதனால் திருவாரூர்-நாகை தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்