9 மாத கர்ப்பிணி சாவு எதிரொலி: பன்றி காய்ச்சல் பாதித்த கிராமத்தில் பொதுமக்கள் பீதி

வானூர் அருகே பன்றி காய்ச்சலுக்கு 9 மாத கர்ப்பிணி பலியானார். அவரது மகனுக்கும் இந்த காய்ச்சல் பாதிப்பு உள்ளதால் அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் பீதி அடைந்து தாமாக முன்வந்து 100க்கும் மேற்பட்டவர்கள் ரத்த பரிசோதனை செய்து கொண்டனர்.

Update: 2018-10-23 22:15 GMT

வானூர்,

வானூர் தாலுகா கீழ்கூத்தப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பஞ்சாபகேசவன் (வயது 35). இவருடைய மனைவி சுகன்யா (27). இவர்களுக்கு யஷ்வரதன் (2) என்ற ஆண்குழந்தை உள்ளது. இந்தநிலையில் தற்போது 9 மாத கர்ப்பிணியாக இருந்த சுகன்யா பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பலியானார்.

இதனால் ஏற்பட்ட சோகம் நீங்குவதற்குள் அவரது மகன் யஷ்வரதனுக்கும் தொடர்ந்து காய்ச்சல் இருந்தது. புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்ந்து பரிசோதித்ததில் அவனும் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவனை மேல்சிகிச்சைக்காக சென்னை நுங்கம்பாக்கம் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு யஷ்வரதனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனால் கீழ்கூத்தப்பாக்கம் கிராம பொதுமக்கள் பீதி அடைந்தனர். இதைத்தொடர்ந்து தங்களுக்கும் பன்றிகாய்ச்சல் இருக்குமோ என்ற அச்சத்தில் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் என 100க்கும் மேற்பட்டவர்கள் தாமாக முன்வந்து ரத்த பரிசோதனை செய்து கொண்டனர். தைலாபுரம், வானூர், கூன்னம், கொம்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் அவர்கள் ரத்த பரிசோதனை செய்தனர். இதன் முடிவை இன்று (புதன்கிழமை) தெரிவிப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

வானூர் அரசு மருத்துவமனையில் கணினி பழுது காரணமாக அனுமதி சீட்டு பெற முடியாமல் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதனையடுத்து ஊழியர்கள் துண்டு சீட்டு கொடுத்து நோயாளிகளை அனுமதித்தனர்.

மேலும் மாத்திரைகளை கவரில் கொடுக்காமல் கையில் கொடுத்து அனுப்பினர். இதனால் எந்த நேரத்தில் எந்த மாத்திரைகள் சாப்பிட வேண்டும் என்பது தெரியாமல் குழம்பியபடியே சென்றனர். அரசு மருத்துவமனை ஊழியர்களின் இதுபோன்ற செயல்களால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

மேலும் செய்திகள்