தண்டி யாத்திரை விழிப்புணர்வு பேரணி - கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்

நெல்லையில் தண்டி யாத்திரை விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் ஷில்பா கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

Update: 2018-10-23 21:45 GMT
நெல்லை, 


நெல்லை மாவட்டத்தில் ‘சுவாஜ் பாரத் யாத்ரா‘ திட்டத்தின் மூலம் உணவு பாதுகாப்பு துறையின் சார்பில், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி நெல்லை வண்ணார்பேட்டையில் மாணவர்களின் உணவு பாதுகாப்பு தொடர்பான தண்டி யாத்திரை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கலெக்டர் ஷில்பா கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தார். பேரணியில் ம.தி.தா. இந்துக்கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு, விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.

மாணவர்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை சார்பில், பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப் போட்டி மற்றும் சமையல் போட்டிகள் நடைபெற்றன. இதில் 40-க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை கலெக்டர் ஷில்பா வழங்கினார்.

தொடர்ந்து ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மூலம் பாரம்பரிய உணவுகள் குறித்த கண்காட்சி, நல்ல உணவு மற்றும் கலப்பட உணவு கண்காட்சி, மகளிர் திட்டம் சார்பில், பிளாஸ்டிக் ஒழிப்பு நெகிழி இல்லா நெல்லை தொடர்பான கண்காட்சி மற்றும் அயோடின் உப்பு தொடர்பாக அமைக்கப்பட்ட விழிப்புணர்வு கண்காட்சியையும் அவர் பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சிகளில் உதவி கலெக்டர் மனிஷ் நாரயணரே, மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் செந்தில்குமார், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி அலுவலர் ஜெயசூர்யா, உணவு பாதுகாப்புத்துறை மண்டல அலுவலர்கள் சங்கரநாராயணன் (தச்சநல்லூர்), சங்கரலிங்கம் (கீழப்பாவூர்), முத்துகுமார் (பாளையங்கோட்டை), மற்றும் செல்லபாண்டியன் (நெல்லை) உள்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்