குடிபோதையில் தகராறு: அண்ணனை கொலை செய்த மின்வாரிய ஊழியர் கைது

பொங்கலூர் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக அண்ணனை இரும்பு கம்பியால் அடித்துக்கொன்ற மின்வாரிய ஊழியரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2018-10-23 21:42 GMT
பொங்கலூர், 


திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே உள்ள கண்டியன்கோவில் காலனியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 38). இவர் பெருந்தொழுவில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி பெயர் பூங்கொடி (32). இவருடைய மகன் சுதாகர்.

இதே அலுவலகத்தில் ரமேசின் தம்பி கஜேந்திரனும் (29) ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி வனிதா (25). இவர்களுக்கு 1½ வயதில் தனுஷா என்ற மகள் உள்ளாள். இந்த நிலையில் நேற்று காலையில் வழக்கம்போல் ரமேசும், கஜேந்திரனும் மோட்டார் சைக்கிள்களில் வேலைக்கு சென்றனர். பின்னர் மாலையில் வேலை முடிந்ததும் அவரவர் மோட்டார் சைக்கிளில் கண்டியன் கோவில் வந்தனர். அப்போது இருவரும் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

வீட்டின் அருகே சென்றதும் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது வாக்குவாதம் முற்றவே அவர்களுக்குள் கைகலப்பாக மாறியது. அங்கு அவர்கள் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக்கொண்டனர். இதில் ஆத்திரம் அடைந்த கஜேந்திரன் அருகில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து ரமேசை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் பலத்த காயம் அடைந்த ரமேஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இது குறித்து அவினாசிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து சென்று ரமேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை தொடர்பாக அவினாசிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கஜேந்திரனை கைது செய்தனர். குடிபோதையில் அண்ணனை, மின்சார வாரிய ஊழியர் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்