மணல் ஏற்றி வந்த மாட்டு வண்டிகளை மறித்து பொதுமக்கள் போராட்டம்

அகரம்சீகூரில், மணல் ஏற்றி வந்த மாட்டு வண்டிகளை மறித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-10-30 22:45 GMT
மங்களமேடு,

கடலூர் மாவட்டம், திட்டக்குடியில் மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றி செல்வதற்கு மணல் குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மணல் குவாரிக்கு திட்டக்குடி, செந்துறை, குன்னம் வட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து தினமும் மணல் அள்ள சுமார் 500 மாட்டு வண்டிகளுக்கு மேல் வருகிறது. இந்த குவாரி காலை 5 மணி முதல் மதியம் வரை இயங்கி வருகின்றன. மணல் குவாரியில் இருந்து மணல் ஏற்றி வரும் மாட்டு வண்டிகள், அகரம்சீகூர் வழியாக வந்து வெள்ளாற்று மேம்பாலத்தில் செல்கிறது. இதனால் அகரம்சீகூர் பஸ் நிலையத்தில் காலை நேரத்தில் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், வியாபாரிகள் என அனை வரும் பாதிக்கப்பட்டனர். எனவே இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தும், திட்டக்குடி மணல் குவாரியை தடை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை 11 மணியளவில் மணல் குவாரியில் இருந்து மணல் ஏற்றி வந்த மாட்டு வண்டி ஒன்று அகரம்சீகூர் பஸ் நிலையம் அருகே வந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக வடிகால் வாய்காலில் மாட்டு வண்டி கவிழ்ந்து. இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக மாடுகளை அவிழ்த்து காப்பாற்றினர். மேலும் மணலுக்கு அடியில் சிக்கி கொண்ட மாட்டு வண்டியை ஒட்டி வந்தவரையும் காப்பாற்றினர்.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போலீசார் பேரிகார்டை அகரம்சீகூர் பஸ் நிலையம் சாலையின் நடுவில் வைத்து அந்த வழியாக மணல் ஏற்றி வந்த மாட்டு வண்டிகளை மறித்து, மாட்டு வண்டிகள் இந்த வழியாக செல்ல கூடாது என்று கூறி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வக்கீல் கள் பிரபாகரன், சுப்ரியா வெங்கடேசன், நாகராஜன் உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மங்களமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நாளை அதாவது இன்று (புதன்கிழமை) முதல் இந்த வழியாக மாட்டு வண்டிகள் செல்ல தடை விதிக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்