வேளாண் உற்பத்திக் குழு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது

வேளாண் உற்பத்திக் குழு கூட்டம் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடந்தது.

Update: 2018-10-30 22:36 GMT

சிவகங்கை,

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் வேளாண் உற்பத்திக் குழுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது.

இதில் கலெக்டர் பேசியதாவது:– விவசாயிகளுக்கு தேவையான திட்டங்களை முழுமையாகப் பெற்று தேவையான காலக்கட்டத்தில் வழங்க வேண்டும். குறிப்பாக தோட்டக்கலைத்துறையின் மூலம் அதிக தொழில்நுட்பங்களுடன் கூடிய உபகரணங்கள் மற்றும் பல்வேறு வகையான கன்றுகள் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

அவற்றை விவசாயிகளின் தேவையை உணர்ந்து வழங்கும் போது பயனுள்ளதாக இருக்கும். அதேபோல் வேளாண் பொறியியல் துறையின் மூலம் மானியத் திட்டத்தில் உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. அதிலும் குறிப்பாக மோட்டார் மற்றும் பைப் வகைகள் எப்போதுமே விவசாயிகளுக்கு பயனுள்ள பொருளாக இருந்து வருகின்றன. இதை விவசாயிகளுக்கு தேவைக்கேற்ப அவர்களிடம் கேட்டறிந்து வழங்கும் போது அவர்களுக்கு மிகப்பயனுள்ளதாக இருக்கும்.

அதேபோல கடந்த ஆண்டு வழங்கிய திட்டங்களின் மூலம் பயனடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது அதற்கேற்ப மேலும் கூடுதலான பொருட்களை தலைமை அலுவலகத்தில் பெற்று விவசாயிகளுக்கு வழங்குவதில் உங்களுடைய பணி அதிக அளவு இருக்க வேண்டும். இந்த பகுதி விவசாயம் நிறைந்த பகுதியாகும். ஒவ்வொரு பொருளும் பணி நடைபெறும் போது வழங்கினால் தான், அது பயனுள்ளதாக இருக்கும்.

இதுபோல வேளாண்மைத்துறையுடன் இணைந்த மற்ற துறைகள் அனைத்தும் ஒருங்கிணைந்து தேவையான விழிப்புணர்வை வழங்குவதுடன் திட்டங்களையும் உடனுக்குடன் வழங்கி விவசாயிகளின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அதேபோல் விவசாயிகளும் தங்களுக்கு தேவையான திட்டங்களைப் பெற்று உற்பத்தித்திறனை அதிகரித்து பயன்பெற்றிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் வேளாண்மைத்துறை இணை இயக்குனர் சேகர், துணை இயக்குனர், உழவர் பயிற்சி நிலையம் சசிகலா, வேளாண் ஆலோசனை குழு உறுப்பினர்கள் அய்யனார், தேவதாஸ், சந்திரன் மற்றுமு அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்