மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு உற்சாவ வரவேற்பு

மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2018-10-30 22:48 GMT

மானாமதுரை,

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வருகை தந்த முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு, மானாமதுரையில் அமைச்சர் பாஸ்கரன், மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.பி. தலைமையில் அ.தி.மு.க.வினர் வரவேற்பு கொடுத்தனர். புதிய பஸ்நிலையம் அருகே காலை முதலே முதல்–அமைச்சரை வரவேற்க கட்சியினரும், பொதுமக்களும் திரளாக காத்திருந்தனர்.

பின்னர் அவர்கள் வழிநெடுகிலும் மலர் தூவி முதல்–அமைச்சரை வரவேற்றனர். முதலில் துணை முதல்–அமைச்சர் பசும்பொன் சென்றார். அதன்பின்பு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்றார். முன்னதாக மானாமதுரை பஸ்நிலையம் முன்பு கூடியிருந்த அனைவரையும் நலம் விசாரித்து அவர்கள் தந்த சால்வையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.

குறிப்பாக காரை விட்டு இறங்கிய முதல்–அமைச்சரை காண பொதுமக்கள் அதிக அளவில் திரண்டு இருந்தனர். இதனால் பொது மக்களுடன், முதல்–அமைச்சர் எளிமையாக பழகி அனைவரிடமும் சால்வையை பெற்று கொண்டது பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மேலும் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்த அமைச்சர் மற்றும் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.பி. ஆகியோரை முதல்–அமைச்சர் பாராட்டி மகிழ்ச்சியை தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் விளத்தூர் நடராஜன், முன்னாள் அரசு வழக்கறிஞர் கணேசன், இளையான்குடி நகர குடி கூட்டுறவு வங்கி தலைவர் பாரதிராஜன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் நெட்டூர் நாகராஜன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதேபோல திருப்புவனத்தில் முதல்–அமைச்சர், துணை முதல்–அமைச்சருக்கு அமைச்சர் பாஸ்கரன் தலைமையில், மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.பி. முன்னிலையில் பூரண கும்ப மரியாதை, கிராமிய கலையுடன் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. தொடர்ந்து பூங்கொத்து கொடுத்து வரவேற்பளிக்கப்பட்டது. இதில் பெண்கள், கட்சியினர் பூக்கள் தூவி வரவேற்றனர். இதில் முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் சிவதேவ்குமார், திருப்புவனம் யூனியன் முன்னாள் துணை தலைவர் புவனேந்திரன், ஒன்றிய செயலாளர் கணேசன், நகர் செயலாளர் நாகரத்தினம் உள்பட கட்சி பிரமுகர்கள் உள்பட பலர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

முதல்–அமைச்சர், துணை முதல்–அமைச்சருடன் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, காமராஜ், ஓ.எஸ்.மணியன், உதயக்குமார் மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் வந்திருந்தனர். முன்னாதாக மாவட்ட எல்லையில் கலெக்டர் ஜெயகாந்தன், போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் ஆகியோர் மலர்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

மேலும் செய்திகள்