மத்திய அரசின் கல்வி உதவி தொகை பெற மாநில அளவிலான தேசிய திறனாய்வு தேர்வு

மத்திய அரசின் கல்வி உதவி தொகை பெறுவதற்கு மாநில அளவிலான தேசிய திறனாய்வு தேர்வை 1½ லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினார்கள்.

Update: 2018-11-04 22:45 GMT
சென்னை,

எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும் மாணவ-மாணவிகளின் கல்வி திறன் அடிப்படையில், தேசிய திறனாய்வு தேர்வு நடத்தி அதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மத்திய அரசின் கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது. 2 நிலைகளாக இத்தேர்வு நடைபெறும். அதன் முதல்நிலை தேர்வு நேற்று தமிழகத்தில் நடைபெற்றது.

தமிழகத்தில் 505 தேர்வு மையங்களில் இந்த திறனாய்வு தேர்வு நேற்று நடந்தது. இதில் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 30 மாணவர்கள் பங்கு பெற்று தேர்வு எழுதினார்கள். முதல்நிலை தேர்வு 2 கட்டங்களாக நடைபெற்றது.

நேற்று காலை 9 மணி முதல் 11 மணி வரை மனத்திறன் தேர்வும், அதன்பிறகு காலை 11 மணி முதல் காலை 11.30 மணிவரை இடைவேளையும், காலை 11.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை படிப்பறிவு தேர்வும் நடந்தது.

இந்த தேர்வின் தொடர்ச்சியாக அடுத்த நிலை தேர்வு மே மாதம் நடைபெற இருக்கிறது. இந்த 2 தேர்வுகளில் தேர்வு பெற்று தகுதி பெறும் மாணவ-மாணவிகளுக்கு மத்திய அரசின் கல்வி உதவி தொகை கிடைக்கும்.

தகுதி பெறுபவர்களுக்கு பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 படிக்கும் வரை மாதம் ரூ.1,000 வீதமும், அதன் பிறகு பட்டப்படிப்பு, முதுகலை படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்பு வரை மாதந்தோறும் கல்வி உதவி தொகையை மத்திய அரசு வழங்கும்.

இதில் தமிழகத்தில் இருந்து குறைவான மாணவர்களே தகுதி பெறுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 40 முதல் 50 மாணவர்கள் தகுதி பெறுவதாகவும், கடந்த ஆண்டில் தான் அதிகபட்சமாக 80 மாணவர்கள் தகுதி பெற்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அதிலும் இந்த எண்ணிக்கையில் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை சொற்ப அளவு தான்.

எனவே தமிழகத்தில் இருந்து அதிகளவில் மாணவர்கள் மத்திய அரசின் கல்வி உதவி தொகையை பெறுவதற்கு ஏதுவாக பள்ளிகளில் கணிதம், அறிவியல் பாடத்தில் உரிய பயிற்சி கொடுத்து, விழிப்புணர்வை ஏற்படுத்தி அரசு அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்று கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்து இருக்கின்றனர்.

மேலும் செய்திகள்