சிவகங்கை அரசு மருத்துவமனையில் துப்புரவு தொழிலாளர்கள் பிச்சை எடுக்கும் போராட்டம்

சிவகங்கை அரசு மருத்துவமனை துப்புரவு தொழிலாளர்கள் சம்பளம், போனஸ் வழங்காததை கண்டித்து பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-11-04 22:00 GMT
சிவகங்கை, 

சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் துப்புரவு பணிகள், செக்கியூரிட்டி பணிகள் என சுமார் 300-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் மூலம் பணியமர்த்தப்பட்டுள்ளனர். நாளை (செவ்வாய்க்கிழமை) தீபாவளி பண்டிகை வரும் சூழ்நிலையில் இங்கு பணிபுரியும் ஒப்பந்த பணியாளர்களுக்கு இதுவரை மாத ஊதியம் மற்றும் போனஸ் வழங்கப்படவில்லையாம்.

அதைத்தொடர்ந்து அவர்கள் பணியை புறக்கணித்து மருத்துவமனை வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போனஸ் வழங்கப்படாத நிலையில் ஊதியத்தையாவது விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர்கள் கூறினர்.

இந்தநிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் திடீரென தாங்கள் அமர்ந்திருந்த இடத்தின் முன்பு தரையில் துண்டை விரித்து பிச்சை எடுப்பு போராட்டம் நடத்தினர்.

தகவலறிந்து வந்த சிவகங்கை தாசில்தார் ராஜா, நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் மற்றும் தனியார் நிறுவன அதிகாரிகள் முத்துகுமார் மற்றும் போஸ் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்களுடன் சமரச பேச்சு நடத்தினர். அதைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அவர்கள் பணிக்கு சென்றனர்.

மேலும் செய்திகள்