போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபடும்போது போலீசார், செல்போன் பயன்படுத்த தடை - கூடுதல் போலீஸ் கமிஷனர் ஹரிசேகரன் உத்தரவு

பெங்களூருவில், போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபடும்போது செல்போன் பயன்படுத்த போலீசாருக்கு தடை விதித்து கூடுதல் போலீஸ் கமிஷனர் ஹரிசேகரன் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2018-11-04 22:26 GMT
பெங்களூரு,

பெங்களூரு நகரில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினையில் சிக்கி வாகன ஓட்டிகள் பரிதவித்து வருகிறார்கள். இதற்கிடையில், பெங்களூரு நகரில் உள்ள போக்குவரத்து சிக்னல்களில் பணியாற்றும் போலீசார், தாங்கள் பணியில் இருக்கும் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய முன்வராமல் செல்போனில் பேசுவது, செல்போனை பார்த்து கொண்டிருப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இவ்வாறு போக்குவரத்து சிக்னல்களில் பணியாற்றும் போலீசார், செல்போன் பயன்படுத்தி கொண்டிருப்பதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதாகவும் புகார்கள் வந்தன. இந்த நிலையில், பெங்களூரு நகரில் உள்ள சிக்னல்களில் போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபடும் போலீசார் பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்துவதற்கு தடை விதித்து போக்குவரத்து கூடுதல் போலீஸ் கமிஷனர் ஹரிசேகரன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதே நேரத்தில் விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளிடம், போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று போக்குவரத்து போலீசாருக்கு, கூடுதல் போலீஸ் கமிஷனர் ஹரிசேகரன் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் செய்திகள்