ஈரோட்டில் உடல் ஆரோக்கிய விழிப்புணர்வு ஊர்வலம்

ஈரோட்டில் உடல் ஆரோக்கிய விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

Update: 2018-11-04 22:15 GMT
ஈரோடு,
மத்திய அரசின் ஸ்வட்ச் பாரத யாத்ரா திட்டத்தின் கீழ் உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு பயணம் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து தொடங்கி டெல்லி நோக்கி செல்கிறது. இந்த விழிப்புணர்வு பயணம் கன்னியாகுமரி, மதுரை, திண்டுக்கல், கரூர் வழியாக ஈரோட்டிற்கு நேற்று முன்தினம் வந்தது. தொடர்ந்து ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானாவில் தொடங்கியது. ஈரோடு மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா கொடி அசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். மேட்டூர் ரோடு, சுவஸ்திக் கார்னர் வழியாக சென்ற ஊர்வலம் வ.உ.சி. பூங்காவில் நிறைவடைந்தது.

இதில் விழிப்புணர்வு பயணத்தில் வந்த மாணவ-மாணவிகள் பங்கேற்று ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்தை தொடர்ந்து உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் ஈரோடு மல்லிகை அரங்கில் நடந்தது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா கூறியதாவது:-

அவசர உலகத்தில் பலர் தங்களது உடல் நலனை பேணி காக்க மறந்துவிடுகிறார்கள். எனவே உடல் நலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரோக்கிய விழிப்புணர்வு பயணம் ஒவ்வொரு பகுதியாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி ஈரோட்டில் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது.

இதில் சத்துள்ள உணவுகளை மக்கள் சாப்பிட வேண்டும். முறையாக உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் போன்ற விழிப்புணர்வு பொதுமக்களிடையே ஏற்படுத்தப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி கலைவாணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்