சார்ஜாவில் இருந்து கோவைக்கு: விமானத்தில் கடத்தி வந்த 761 கிராம் தங்க கட்டிகள் பறிமுதல் - சூடான் நாட்டை சேர்ந்தவர் கைது

சார்ஜாவில் இருந்து கோவைக்கு விமானத்தில் கடத்தி வந்த 761 கிராம் தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக சூடான் நாட்டை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

Update: 2018-11-05 21:45 GMT
கோவை,

கோவையில் இருந்து சார்ஜா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு தினமும் ஏராளமான விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமானங்கள் மூலம் தங்கம் கடத்தப்படுவதை தடுக்க மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் சார்ஜாவில் இருந்து கோவைக்கு வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர்கள் கடந்த 3-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு சார்ஜாவில் இருந்து கோவைக்கு வந்த விமானத்தில் இறங்கிய பயணிகளிடம் சோதனை செய்தனர்.

அதில் ஒரு பயணியின் நடவடிக்கை மட்டும் அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதை யடுத்து அதிகாரிகள் அந்த பயணியை தனி அறைக்கு அழைத்துச் சென்று விசாரணை செய்ததுடன், அவரை சோதனை செய்தனர். அப்போது அவர் செல்போனுக்குள் தங்க கட்டிகளை மறைத்து கடத்தி வந்ததுடன், அவர் அணிந்திருந்த பெல்ட் பக்கிளும் தங்கத்தால் ஆனது என்பது தெரியவந்தது.

இதையடுத்து அதிகாரிகள் 761 கிராம் எடை கொண்ட 5 தங்க கட்டிகள் மற்றும் தங்கத்தினால் ஆன ‘பெல்ட் பக்கிள்’ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அந்த நபரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர் சூடான் நாட்டை சேர்ந்த ஹபீஸ் அகமது இஷாக் மூஷா (வயது 38) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

இது குறித்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:-

தற்போது கைதான ஹபீஸ் அகமது இஷாக் மூஷா, 2 செல்போன்களில் பேட்டரியை எடுத்துவிட்டு அதற்குள் 5 சிறிய அளவிலான தங்க கட்டிகளை வைத்து மறைத்து கொண்டு வந்துள்ளார். அதுபோன்று அவர் அணிந்து இருந்த பெல்ட்டின் பக்கிளும் தங்கம் ஆகும். எனவே அவற்றை பறிமுதல் செய்து உள்ளோம். அனுமதி இல்லாமல் ரூ.20 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகளை கொண்டு வரும்போது, சம்பந்தப்பட்ட நபரை பிடித்து அவர் கொண்டு வந்த பொருட்களை பறிமுதல் செய்வோம். அந்த நபரை கைது செய்ய மாட்டோம்.

ஆனால் அந்த நபர் கடத்தி வரும் பொருட்களின் மதிப்பு ரூ.20 லட்சத்தை தாண்டும் பட்சத்தில் அவரை கைது செய்வோம். அந்த வகையில்தான் ஹபீஸ் அகமது இஷாக் மூஷாவை கைது செய்து உள்ளோம். அவரிடம் இருந்து தேவையான தகவல் கிடைத்து விட்டதால் அவரை ஜாமீனில் விடுவித்து விட்டோம். அவர் கொண்டு வந்த தங்க கட்டிகளின் மதிப்பு ரூ.24 லட்சத்து 96 ஆயிரம் ஆகும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

மேலும் செய்திகள்