வெள்ளோடு அருகே பரிதாபம்: லாரி சக்கரத்தில் சிக்கி, பிளஸ்-1 மாணவர் தலை நசுங்கி சாவு

வெள்ளோடு அருகே லாரி சக்கரத்தில் சிக்கி பிளஸ்-1 மாணவர் தலை நசுங்கி பரிதாபமாக இறந்தான்.

Update: 2018-11-05 21:30 GMT
சென்னிமலை, 

வெள்ளோடு அருகே குட்டப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மகன் யோகவேல் என்கிற தேவராஜ் (வயது 16). இவர் வெள்ளோடு அரசு பள்ளிக்கூடத்தில் பிளஸ்-1 படித்து வந்தார்.

நேற்று பள்ளிக்கூடம் விடுமுறை என்பதால் தேவராஜ் வீட்டில் இருந்தார். அப்போது அவருடைய உறவினர் ஒருவர் மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு வந்துள்ளார். இதைத்தொடர்ந்து தேவராஜ் அந்த மோட்டார்சைக்கிளை எடுத்துக்கொண்டு வெள்ளோட்டிற்கு சென்றார்.

பின்னர் வீடு திரும்பிய அவர் வெள்ளோடு மாரியம்மன் கோவில் அருகில் சென்று கொண்டு இருந்தார். அவரது மோட்டார்சைக்கிளுக்கு முன்பு லாரி ஒன்று சென்றது. அந்த லாரியை முந்தி செல்ல முயன்றபோது ரோட்டோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மொபட் மீது தேவராஜின் மோட்டார்சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதியது.

இதனால் அவர் மோட்டார்சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது லாரியின் பின் சக்கரம் அவரது தலையில் ஏறி இறங்கியது. இதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி வெள்ளோடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தேவராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வெள்ளோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரியை ஓட்டிவந்த சந்திரசேகரன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்