மணவாளக்குறிச்சி அருகே மீனவ கிராமத்தில் கோஷ்டி மோதல் பாதிரியார் உள்பட 21 பேர் மீது வழக்கு

மணவாளக்குறிச்சி அருகே மீனவ கிராமத்தில் ஏற்பட்ட கோஷ்டி மோதல் தொடர்பாக பாதிரியார் உள்பட 21 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2018-11-08 22:15 GMT
மணவாளக்குறிச்சி,

மணவாளக்குறிச்சி அருகே கடற்கரை கிராமத்தில் மணல் எடுப்பது தொடர்பாக சின்னவிளை, முட்டம் பகுதி மீனவர்கள் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால், அவர்கள் இடையே முன்விரோதம் ஏற்பட்டு இருதரப்பினரும் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வந்தனர்.

இந்தநிலையில் இருதரப்பினருக்கும் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. அவர்கள் கட்டை, கம்பி போன்ற ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் தாக்கினர். மீன்பிடி உபகரணங்களை அடித்து உடைத்து சூறையாடினர். இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. மேலும், படகுகள், வலைகள் போன்றவை சேதமடைந்தன.

இந்த மோதல் தொடர்பாக ஒரு தரப்பை சேர்ந்த அந்தோணி அடிமை, மற்றொரு தரப்பை சேர்ந்த அமலோற்பவம் ஆகியோர் தனித்தனியாக மணவாளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகார்களின் அடிப்படையில் சின்னவிளை பாதிரியார் ஆன்டனி கிளாரட் உள்பட 21 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மீனவர்களுக்கிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதல் சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்