கொசு உற்பத்தியை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் நகராட்சி ஆணையர் வேண்டுகோள்

மன்னார்குடி பகுதியில் கொசு உற்பத்தியை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என நகராட்சி ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2018-11-08 22:45 GMT
சுந்தரக்கோட்டை,

மன்னார்குடி பகுதிகளில் டெங்கு காய்ச்சலை தடுக்க நகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனையொட்டி மன்னார்குடி பூக்கொல்லை பகுதியில் நடைபெற்ற டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை நகராட்சி ஆணையர் விஸ்வநாதன் ஆய்வு செய்தார். அப்போது டயர் கடைகள், பஞ்சர் மற்றும் பழுது பார்க்கும் கடைகளில் உள்ள டயர்களை உடனே அப்புறப்படுத்தவும் மற்றும் அபராத தொகை விதித்தும் உத்தரவிட்டார்.

அப்போது நகராட்சி ஆணையர் விஸ்வநாதன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

டெங்கு கொசு உற்பத்தியாகும் கலன்கள் கண்டறியப் பட்டலோ, பொதுமக்கள், வணிகர்கள் தங்கள் இருப்பிடத்தினை கொசுப்புழு உற்பத்தி செய்ய ஏதுவாக வைத்திருப்பது கண்டறியப்பட்டாலோ, உடனே அதற்கான அபராத தொகை விதிக்கப்படும். 2-வது முறையாக கண்டறியப்பட்டால் 10 மடங்கு அபராத தொகை வசூலிக்கப்படும்.நகராட்சிப் பகுதிகளில் கொசுப்புழு உற்பத்தியாகும் வரை சுற்றுப்புறத்தை அசுத்தமாக வைத்திருந்தது தொடர்பாக இதுவரை ரூ.50 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும், சுற்றுப்புறங்களிலும் கொசு உற்பத்தி கலன்கள் மற்றும் அமைப்புகள் இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பதற்கு கொசு உற்பத்தியை தடுக்க பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் நகராட்சிக்கு தங்களது முழு ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது நகராட்சி சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன், நகரமைப்பு ஆய்வாளர் விஜயகுமார் உள்பட நகராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்