குமரகோட்டம், திருப்போரூர் முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குமரகோட்டம், திருப்போரூர் முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.

Update: 2018-11-08 22:30 GMT
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தில் கந்தபுராணம் அரங்கேறிய குமரகோட்டம் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு, தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து முருகபெருமானை தரிசனம் செய்கின்றனர். இந்த கோவிலில் கந்தசஷ்டி விழா நேற்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி முருகபெருமானுக்கு விசேஷ அபிஷேகம் நடந்தது. பிறகு, முருகபெருமான் வள்ளி, தெய்வானை உற்சவருடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

லட்சார்ச்சனை நடைபெற்றது. முக்கிய விழாவாக வருகிற 13-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் என்.தியாகராஜன், மேலாளர் சீனிவாசன் ஆகியோர் செய்து இருந்தனர்.

திருப்போரூர்

காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் காஞ்சீபுரம் எம்.பி. மரகதம் குமரவேல், காஞ்சீபுரம் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முக்கிய விழாவாக வருகிற 13-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் ரமணி, கோவில் செயல் அலுவலர் சக்திவேல், கோவில் மேலாளர் வெற்றிவேல் மற்றும் பலர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்