மதுரையில் சர்கார் படத்துக்கு எதிர்ப்பு: தியேட்டர் முன்பு அ.தி.மு.க.வினர் போராட்டம்

மதுரையில் சர்கார் படம் திரையிடப்பட்ட தியேட்டர் முன்பு அ.தி.மு.க.வினர் எம்.எல்.ஏ. தலைமையில் போராட்டம் நடத்தினர்.

Update: 2018-11-08 23:36 GMT
மதுரை,

நடிகர் விஜய் நடித்து தீபாவளிக்கு வெளியான சர்கார் திரைப்படத்தில் மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் இயற்பெயரை தவறாக பயன்படுத்தியதாகவும், அரசின் இலவச திட்டங்களை கொச்சைப்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் மதுரை அண்ணாநகரில் சர்கார் படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர் முன்பு ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க.வினர் திடீர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

தியேட்டரில் படம் ஓடிக் கொண்டிருந்த வேளையில் வெளியே அ.தி.மு.க.வினர் நடத்திய இந்த போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நடிகர் விஜய்க்கு எதிராகவும், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கக் கோரியும் கோஷங்கள் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசார் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் எம்.எல்.ஏ.விடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து அ.தி.மு.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

போராட்டம் குறித்து ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறும்போது, முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏழை மக்களுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். அவரது பெயரையும், புகழையும் கெடுக்கும் விதத்தில் உள் நோக்கத்தோடு சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம் பெற்றுள்ளன. மக்களால் அமோக வரவேற்பை பெற்ற அரசின் திட்டங்கள் இந்த படத்தில் கொச்சைப்படுத்தப்பட்டு உள்ளன. எனவே சர்கார் படத்தில் இடம் பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும். அவ்வாறு நீக்காவிட்டால் அ.தி.மு.க.வின் போராட்டம் தொடரும்“ என்றார்.

இதற்கிடையே பகல் 2 மணி காட்சி ரத்து செய்யப்பட்டதாக தியேட்டர் நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டது. போராட்டத்தின் எதிரொலியாக மதுரையில் சர்கார் படம் வெளியிடப்பட்டுள்ள தியேட்டர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்