கரூரில் நகைசெய்வதற்காக கொடுக்கப்பட்ட 3 கிலோ தங்க கட்டிகளுடன் வாலிபர் மாயம் போலீசார் வலைவீச்சு

கரூரில் நகை செய்வதற்காக கொடுக்கப்பட்ட 3 கிலோ தங்க கட்டிகளுடன் வாலிபர் மாயமானார். அவரை போலீசார் தேடிவருகிறார்கள்.

Update: 2018-11-14 23:15 GMT
கரூர்,

கரூர் குருநாதன் தெருவை சேர்ந்தவர் நந்தா ராஜேஷ் (வயது 49). இவர், கரூர் கோவை ரோட்டில் தங்கம் மற்றும் வைர நகைகளை விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் தங்க கட்டிகளை கொள்முதல் செய்து, பின்னர் அதனை வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப நகைகளாக வடிவமைத்து விற்பனை செய்வது வழக்கம்.

இவரிடம், கடந்த சில ஆண்டுகளாக தாந்தோன்றிமலை தென்றல் நகரை சேர்ந்த பாலுசேட் என்ற தீபக் மிட்டல் (30), தங்க கட்டிகளை வாங்கிக்கொண்டு, அதனை கோவையிலுள்ள நகை வடிவமைக்கும் நிறுவனத்தில் கொடுத்து நகைகளை செய்ய கொடுப்பார். பின்னர் அந்த நகைகளை வாங்கி வந்து நந்தா ராஜேசிடம் கொடுப்பார். இதற்காக தீபக் மிட்டலுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை கூலியாக வழங்கப்பட்டது.


இந்தநிலையில் கடந்த 2-ந்தேதி நந்தா ராஜேஷின் நகைக்கடைக்கு சென்ற தீபக் மிட்டல், அங்கு ரூ.75 லட்சம் மதிப்புடைய 3 கிலோ தங்க கட்டிகளை நகை செய்வதற்காக வழக்கம்போல் வாங்கி சென்றார். பின்னர் அவர், அந்த தங்க கட்டிகளுக்குரிய நகையை செய்து கொண்டுவராமல் இழுத்தடித்தார். இதனால் சந்தேகமடைந்த நந்தா ராஜேஷ் கோவையிலுள்ள நகை செய்யும் நிறுவனத்தை தொடர்பு கொண்டு விசாரித்த போது, அவர்களிடம் தீபக் மிட்டல் தங்க கட்டிகளை தரவில்லை என்பது தெரியவந்தது. மேலும் அவரது செல்போனுக்கு தொடர்புகொண்ட போது அது ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த நந்தா ராஜேஷ், தீபக் மிட்டல் வீட்டுக்கு சென்று பார்த்தபோது அவர் குடும்பத்துடன் தலைமறைவானது தெரியவந்தது. கரூர் நகரில் இதுபோல் மேலும் சில நகைக்கடைக்காரர்களிடமும் தங்க கட்டிகளை தீபக் மிட்டல் பெற்றதாக கூறப்படுகிறது. அவர் மாயமான தகவல் கரூர் மாவட்ட நகைக்கடைக்காரர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் நேற்றுமுன்தினம் நந்தா ராஜேஷ் புகார் கொடுத்தார். அதன்பேரில் கரூர் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா, இன்ஸ்பெக்டர் பிருத்விராஜ் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட நகைக்கடைகளுக்கு சென்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

அப்போது நம்பிக்கையின் அடிப்படையில் தங்கக்கட்டிகளை கொடுத்து தீபக் மிட்டலிடம் வேலை வாங்கினோம். அவர் மராட்டிய மாநிலம் சங்கிலி மாவட்டத்திலிருந்து கரூருக்கு வந்து 5 ஆண்டுகளுக்கும் மேலாக தொழில் செய்தார். திடீரென அவர் தங்க கட்டிகளுடன் தலைமறைவானது எங்கள் தொழிலுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என நகைக்கடைக்காரர்கள் சிலர் போலீசாரிடம் தெரிவித்தனர்.

தீபக் மிட்டலின் நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்டோரிடம் விசாரித்த போது, முதல்கட்டமாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர் பெங்களூருவுக்கு தப்பி சென்றிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். அவரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். அவர் பிடிபட்டதும் தங்க கட்டிகள் மீட்கப்படும் என மாவட்ட போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்