கஜா புயலால் மாவட்டத்தில் 76 இடங்கள் பாதிக்க வாய்ப்பு கண்காணிப்பு அதிகாரி தகவல்

கஜா புயலால் கரூர் மாவட்டத்தில் பாதிப்படையக்கூடும் என 76 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது என்று மாவட்ட கண்காணிப்பு அதிகாரி விஜயராஜ்குமார் கூறினார்.

Update: 2018-11-15 22:45 GMT
கரூர்,

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கஜா புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். கஜா புயல் பாதுகாப்பு பணிகளை துரிதப்படுத்த கரூர் மாவட்டத்திற்கென நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட கண்காணிப்பு அதிகாரியும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை முதன்மை செயலாளருமான விஜயராஜ்குமார் கலந்து கொண்டு, புயல் பாதுகாப்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

கரூர் மாவட்டத்தில், கஜா புயலால் பாதிப்பு ஏற்பட்டால் நிலைமையை கையாள்வதற்கு மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. புயலால் பாதிப்படையக்கூடிய பகுதிகள் என 76 இடங்கள் மாவட்டம் முழுவதும் கண்டறியப்பட்டுள்ளது. அவ்வாறு பாதிப்பு ஏற்படும்போது அது குறித்து முதல் தகவல் அளிப்பதற்காக 760 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்பணிக்காக முதன்மை கண்காணிப்பு குழு, தேடுதல் மற்றும் மீட்புக்குழு, நிவாரணம் மையம் மற்றும் மைய மேற்பார்வைக்குழு, முன்னெச்சரிக்கை குழு, கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் மண்டல அலுவலர்கள் என பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையில் முன் எச்சரிக்கை குழுவும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் தேடுதல் மற்றும் மீட்புக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைப்பதற்கு 65 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளது. வருவாய் கோட்டாட்சியர்கள் மேற்பார்வையில் இந்த மையங்கள் செயல்படும். அவர்களுக்கு உதவியாக 6 கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் 95 மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் வருவாய்த்துறை, மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை, கல்வித்துறை, செய்தி மக்கள் தொடர்புத்துறை, தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் என அனைத்து துறை சார்ந்தவர்களும் ஒருங்கிணைந்து செயல்பட உள்ளனர். மேலும், புயல் பாதிப்புகள் குறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் கட்டுப்பாட்டு அறையின் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசியிலும் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் எஸ்.கவிதா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வசுரபி, மாவட்ட கலெக்டர் அலுவலக மேலாளர் ராம்குமார், வேளாண்மை இணை இயக்குனர் ஜெயந்தி உள்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்