மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் மீன் மார்க்கெட் வெறிச்சோடியது

கஜா புயல் எச்சரிக்கையை தொடர்ந்து மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் பனைக்குளம் மீன் மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது.

Update: 2018-11-15 22:15 GMT
பனைக்குளம்,

கஜா புயல் எச்சரிக்கையை தொடர்ந்து ராமேசுவரம், மண்டபம், வேதாளை, தங்கச்சிமடம், உச்சிப்புளி, புதுமடம், பனைக்குளம், அழகன்குளம், தேவிபட்டினம், பழனிவலசை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

இதனால் அந்தந்த பகுதிகளில் உள்ள மீன் மார்க்கெட்டுகள் வெறிச்சோடி காணப்பட்டன. இதேபோல பனைக்குளத்தில் உள்ள மீன் மார்க்கெட்டில் பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம், உச்சிப்புளி, களிமண்குண்டு, புதுமடம், வேதாளை உள்ளிட்ட பகுதிகளில் பிடிபடும் மீன்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுவது வழக்கம். இதுதவிர பனைக்குளம் புதுக்குடியிருப்பு, கிருஷ்ணாபுரம், சோகையன்தோப்பு ஆகிய பகுதிகளில் இருந்து கரைவலை மீன்களும் இங்கு கிடைக்கும்.

இந்த நிலையில் கஜா புயல் எச்சரிக்கை காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லாததால் மீன் வரத்து அடியோடு இல்லாமல் பனைக்குளம் மீன் மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது.

இதைத்தொடர்ந்து கோழி இறைச்சிக்கு மவுசு கூடியுள்ளது. வழக்கமாக பனைக்குளம் பகுதியில் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே கோழி இறைச்சிகள் விற்பனை செய்யப்படும். ஆனால் கடந்த சில நாட்களாக மீன்கள் வரத்து இல்லாததால் கோழி இறைச்சிக்கு பொதுமக்களிடையே மவுசு அதிகரித்துள்ளது அசைவ பிரியர்களின் கூட்டம் கோழிக்கடைகளில் வெகுவாக காணப்பட்டது. இதனால் பனைக்குளம் பகுதியில் ஒரு கிலோ கோழி கறி ரூ.160 முதல் ரூ.180 வரை விற்பனையானது.


இதுகுறித்து மீன், ஆட்டிறைச்சி வியாபாரி உதுமான் அலி என்பவர் கூறும்போது, கடந்த பல ஆண்டுகளாக ஆட்டிறைச்சி மற்றும் மீன் வியாபாரம் செய்து வருகிறேன். களிமண்குண்டு, பெரியபட்டனம், ஆற்றங்கரை, புதுமடம் பகுதி கடற்கரைக்கு சென்று மீன்களை வாங்கி வந்து இருசக்கர வாகனத்தில் தெருத்தெருவாக விற்பனை செய்வேன். தற்போது புயல் சின்னம் அறிவிக்கப்பட்டுள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் ஆட்டிறைச்சி மற்றும் கோழி கறிக்கு மவுசு கூடியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்