தனியார் பள்ளிக்கூட பஸ் ரப்பர் தோட்டத்துக்குள் புகுந்தது மாணவ, மாணவிகள் உள்பட 12 பேர் காயம்

களியக்காவிளை அருகே தனியார் பள்ளிக்கூட பஸ் ரப்பர் தோட்டத்துக்குள் புகுந்தது மாணவ, மாணவிகள் உள்பட 12 பேர் காயம்.

Update: 2018-11-15 22:45 GMT
களியக்காவிளை,

கேரள மாநிலம் காரக்கோணம் பகுதியில் ஒரு தனியார் பள்ளிக்கூடம் உள்ளது. இங்கு களியக்காவிளை பகுதியை சேர்ந்த ஏராளமானோர் படித்து வருகின்றனர். இந்த மாணவ, மாணவிகளை அழைத்து செல்வதற்கு பள்ளிக்கூட பஸ் வருவது வழக்கம். அதன்படி நேற்று காலையில் மாணவர்களை ஏற்றியபடி பஸ் சென்றது. பஸ்சை டிரைவர் அஜி (வயது 42) என்பவர் ஓட்டினார்.

களியக்காவிளை அருகே மணிவிளை பகுதியை சென்றடைந்த போது பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த ரப்பர் தோட்டத்துக்குள் புகுந்தது. இதனால் பஸ்சில் பயணம் செய்த மாணவ, மாணவிகள் அய்யோ, அம்மா என்று அலறினர். பஸ்சின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. இந்த விபத்தில் பிரார்த்தனா (7), டிரைவர் அஜி, உதவியாளர் லாலி (52) உள்பட 12 பேர் காயமடைந்தனர். இதில் 10 பேர் மாணவ, மாணவிகள். இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக பாறசாலையில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். மேலும் இதுதொடர்பாக பளுகல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்