உபேர், ஓலா டிரைவர்கள் நாளை முதல் மீண்டும் வேலை நிறுத்தம்

மும்பையில் நாளை முதல் உபேர்,ஓலா டிரைவர்கள் மீண்டும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.

Update: 2018-11-15 22:51 GMT
மும்பை,

மும்பையில் உபேர், ஓலா உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் வாடகை கார்களை இயக்கி வருகின்றன. கார் வாடகையை அதிகரிக்க வேண்டும், தங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஓலா, உபேர் நிறுவனங்களுக்கு கார் ஓட்டும் டிரைவர்கள் கடந்த மாதம் 22-ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதன் காரணமாக சுமார் 50 ஆயிரம் வாடகை கார்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

வாடகை கார் டிரைவர்கள் பிரச்சினையில் நவம்பர் 15-ந்தேதிக்குள் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என மந்திரி திவாகர் ராவுத்தே தெரிவித்தார். இதையடுத்து, 12 நாட்களாக நீடித்த வேலை நிறுத்த போராட்டத்தை வாடகை கார் டிரைவர்கள் வாபஸ் பெற்றனர்.

இருப்பினும் அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் மீண்டும் பெரியளவில் போராட்டம் நடத்தப்படும் என அவர்கள் ஏற்கனவே எச்சரித்து இருந்தனர்.

அதன்படி உபேர், ஓலா டிரைவர்கள் நாளை(சனிக்கிழமை) முதல் மீண்டும் வேலை நிறுத்தத்தில் குதிக்க உள்ளதாக அறிவித்து உள்ளனர். 19-ந்தேதி அன்று பாரத் மாதா பகுதியில் இருந்து சட்டசபை நோக்கி பிரமாண்ட பேரணி நடத்தப்படும் எனவும் தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்