கஜா புயல் எச்சரிக்கை: மீனவ கிராமங்களில் அமைச்சர் கந்தசாமி ஆய்வு

கஜா புயல் எச்சரிக்கையையொட்டி நரம்பை, பனித்திட்டு மீனவ கிராமங்களில் அமைச்சர் கந்தசாமி அதிகாரிகளுடன் சென்று முன்னெச்சரிக்கை பணிகளை ஆய்வு செய்தார். அப்போது பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மீனவர்களை அமைச்சர் அறிவுறுத்தினார்.

Update: 2018-11-15 23:54 GMT
பாகூர்,

புயல் எச்சரிக்கையையொட்டி புதுச்சேரி மாநிலம் பனித்திட்டு, நரம்பை உள்ளிட்ட மீனவ கிராமங்களுக்கு அமைச்சர் கந்தசாமி அதிகாரிகளுடன் சென்று நேற்று ஆய்வு செய்தார். அப்பகுதி மீனவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு சென்று தங்கும்படி கேட்டுக்கொண்டார்.

அப்போது அப்பகுதி மீனவர்கள் அமைச்சர் கந்தசாமியிடம், பல்வேறு புகார்கள் தெரிவித்தனர். மீனவர்களுக்கு வழங்கப்படும் பேரிடர் கால நிவாரணம் கடந்த 2 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. புயல் எச்சரிக்கை காரணமாக கடந்த 3 நாட்களாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. மீன்பிடி வலைகளை உலர வைக்கவும் பாதுகாக்கவும் கட்டிடம் இல்லாமல் சிரமமாக உள்ளது. இடம் தேர்வு செய்தும் இதுவரை இலவச மனைபட்டா வழங்கப்படவில்லை என புகார்கள் தெரிவித்தனர்.

அவர்களிடம் அமைச்சர் கந்தசாமி கூறுகையில், முதல்-அமைச்சர் நாராயணசாமியிடம் பேசி பேரிடர் கால நிதி வழங்க ஏற்பாடு செய்யப்படும். நாளை (இன்று) மருத்துவ குழுவை பனித்திட்டு பகுதிக்கு வரவழைத்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அமைச்சருடன் மீன்வளத்துறை இயக்குனர் முனுசாமி, இணை இயக்குனர் தெய்வசிகாமணி, பாகூர் தாசில்தார் கார்த்திகேயன், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சவுந்திரராஜன் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கடற்கரை கிராமங்களில் போலீசாரும், வருவாய் துறையினரும் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு புயல் எச்சரிக்கை விடுத்தனர். மூ.புதுக்குப்பம், நரம்பை, பனித்திட்டு, வீராம்பட்டினம் மீனவர்கள் தங்களது வலைகள், படகுகளை மேடான பகுதிக்கு கொண்டு சென்று வைக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினார்கள். தவளக்குப்பம் போலீசார் நல்லவாடு மீனவ கிராமத்துக்கும், அரியாங்குப்பம் போலீசார் வீராம்பட்டினம், சின்ன வீராம்பட்டினம் கடற்கரை கிராமங்களுக்கும் சென்று ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும் செய்திகள்