அனகாபுத்தூரில் திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் சமுதாய நலக்கூடம்

அனகாபுத்தூரில் கட்டி முடித்து பல மாதங்கள் ஆகியும் திறக்கப்படாமல் உள்ள சமுதாய நலக்கூடத்தை விரைவில் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2018-11-16 23:00 GMT
தாம்பரம்,

சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் நகராட்சி 18 வார்டுகளை கொண்டது. 14 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன. 60 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். பெயரளவில் நகராட்சியாக இருந்தாலும் இங்கு அனைத்து அடிப்படை வசதிகளும் முறையாக இல்லை. பல புதிய குடியிருப்பு பகுதிகள் சாலை வசதி இல்லாமல் சென்னையின் அருகிலேயே இன்னும் மண் சாலையாக உள்ள பல தெருக்கள் அனகாபுத்தூர் நகராட்சியில் உள்ளது.

இந்த பகுதிகளில் மழைநீர் கால்வாய் வசதிகளும் இல்லை. இந்த பகுதி மக்கள், தங்கள் பகுதிக்கு எந்த அடிப்படை வசதி கேட்டாலும் நகராட்சியில் போதிய நிதி இல்லை. நிதி வந்தால் பணிகள் செய்வோம் என்ற பதிலையே நகராட்சி அதிகாரிகள் பல ஆண்டுகளாக கூறி வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் பல ஊராட்சிகள், பேரூராட்சிகளில் சமுதாய நலக்கூடங்கள் சிறப்பாக செயல்பட்டுவரும் நிலையில், அனகாபுத்தூர் நகராட்சியில் சமுதாய நலக்கூடம் இல்லாமல் இருந்தது. இதனால் காதணி, நிச்சயதார்த்தம், சீமந்தம் போன்ற சிறிய நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு கூட தனியார் திருமண மண்டபங்களுக்கு செல்லவேண்டிய நிலை உள்ளது.

தனியார் மண்டபங்களில் சில மணி நேரம் நிகழ்ச்சிக்கு கூட குறைந்தபட்சம் ரூ.15 ஆயிரம் கட்டணம் வசூலிப்பதால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். சிலர் வேறுவழியின்றி வீடுகளிலேயே நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.

இதனால் பொதுமக்களின் வசதிக்காக சமுதாய நலக்கூடம் கட்டவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து 2015-16-ம் ஆண்டில் ரூ.50 லட்சத்தில் அனகாபுத்தூர் நகராட்சி அலுவலகம் பின்புறம் சமுதாய நலக்கூடம் கட்டும் பணி தொடங்கியது.

தரைதள பணிகள் மட்டுமே முடிந்த நிலையில் வழக்கமாக நகராட்சி அதிகாரிகள் கூறும் நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. கட்டி முடித்தும் பயன் இல்லை என்ற நிலையில் இருந்த சமுதாய நலக்கூடத்துக்கு மீதியுள்ள பணிகளுக்கு நிதி ஒதுக்கி, சமுதாய நலக்கூடத்தை திறக்கவேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.

அதன்பிறகு கூடுதலாக ரூ.50 லட்சம் செலவில் கழிப்பறை, சமையல் அறை, உணவு அருந்தும் இடம், அறைகள், சுற்றுச்சுவர் போன்ற பணிகள் முடிக்கப்பட்டன.

இதன் பிறகு மேலும் ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கி மற்ற பணிகளும் நடைபெற்றது. தற்போது பணிகள் அனைத்தும் முடிந்து திறப்பு விழாவுக்காக சமுதாய நலக்கூடம் காத்திருக்கிறது. பல மாதங்கள் ஆகியும் இன்னும் திறக்கப்படாமல் சமுதாய நலக்கூடம் பூட்டியே கிடக்கிறது.

இதுபற்றி நகராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்கள் கேட்டால் இன்னும் சில பணிகள் பாக்கி உள்ளது. நிதி இல்லை என்ற பதிலையே கூறி வருகின்றனர். இது தொடர்பாக பொதுமக்கள் கூறியதாவது:-

அனகாபுத்தூர் நகராட்சியில் எந்த பணிகள் குறித்து கேட்டாலும் தங்களிடம் நிதி இல்லை என்ற பதிலே நகராட்சி அதிகாரிகளிடம் இருந்து வருகிறது. தற்போது கட்டப்பட்டு உள்ள சமுதாய நலக்கூடத்தில் ஒரே நேரத்தில் 150 முதல் 200 பேர் வரை அமரமுடியும்.

ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் கட்டப்பட்டு உள்ள சமுதாய நலக்கூடத்தை விரைவில் திறந்து வைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இந்த சமுதாய நலக்கூடத்தை சுற்றிலும் மாடுகள் கட்டப்பட்டு, மாட்டு சாணமாகவும், குப்பைகளும் நிறைந்து சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலையில் உள்ளது. மழை பெய்தால் அந்த வழியாக பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளதுடன், துர்நாற்றமும் வீசுகிறது. சமுதாய நலக்கூடம் திறக்கப்பட்டால் அங்கு சுபநிகழ்ச்சிக்கு வருபவர்கள் முகம் சுளிக்கும் நிலை உள்ளதால் சமுதாய நலக்கூடம் திறக்கப்படுவதற்கு முன்பாக அதை சுற்றி உள்ள குப்பைகள், மாட்டு சாணங்களை அகற்றி, மீண்டும் அங்கு மாடுகளை கட்ட முடியாத அளவுக்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக நகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “நகராட்சியில் நிதி இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக அரசு நிதி பெற்று பணிகளை செய்து வருகிறோம். இன்னும் ஒரு சில பணிகள் பாக்கி உள்ளது. அந்த பணிகளை முடித்துவிட்டு சமுதாய நலக்கூடத்துக்கு எவ்வளவு வாடகை என்பதை நகராட்சியில் அறிவிப்பு பலகை வைக்க ஏற்பாடு செய்து வருகிறோம். வரும் ஜனவரி மாதம் சமுதாய நலக்கூடத்தை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது”என்றனர்.

நிதி பற்றாக்குறை காரணத்தை கூறி நீண்ட காலமாக திறக்கப்படாமல் உள்ள சமுதாய நலக்கூடத்தை மேலும் இழுத்தடிக்காமல் நகராட்சி அதிகாரிகள் தற்போது கூறியபடி ஜனவரி மாதத்திலாவது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்க வேண்டும் என்பதே அனகாபுத்தூர் நகராட்சி பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் செய்திகள்