வீட்டை காலி செய்ய உதவுவது போல் நடித்து நண்பர் வீட்டில் 18 பவுன் நகை திருடியவர் கைது

வீட்டை காலி செய்ய உதவுவது போல் நடித்து நண்பர் வீட்டில் 18 பவுன் நகை திருடியவரை கைது செய்தனர்.

Update: 2018-11-16 22:15 GMT
செங்குன்றம்,

சென்னை மாத்தூர், எம்.எம்.டி.ஏ. 3-வது மெயின் ரோட்டில் வசித்து வருபவர் கணேசன் (வயது 38). இவர், அந்த பகுதியில் டிபன் கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த மார்ச் மாதம் ஏற்கனவே தான் வசித்து வந்த வீட்டை காலி செய்துவிட்டு இந்த வீட்டுக்கு குடிபெயர்ந்து வந்தார்.

கணேசன் தனது வீட்டில் இருந்த நகைகளை சரிபார்த்தபோது, 18 பவுன் தங்க நகைகள் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்த புகாரின் பேரில் மாதவரம் பால்பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

அதில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகா அருமந்தை கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் (24) என்பவர்தான் அந்த நகையை திருடி இருப்பது தெரிந்தது. இவரும், கணேசனும் நண்பர்கள் ஆவர். கேட்டரிங் முடித்து ஒரே ஓட்டலில் பணிபுரிந்து வந்தனர். அப்போது கணேசன் வீட்டை காலி செய்யும்போது அவருக்கு பொருட்களை ஏற்றி, இறக்க உதவுவதுபோல் நடித்து கணேசன் வீட்டில் இருந்த 18 பவுன் நகையை திருடியது தெரிந்தது.

இதையடுத்து கார்த்திக்கை போலீசார் கைது செய்தனர். இவர் மீது பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் ஒரு சங்கிலி பறிப்பு வழக்கு உள்ளதும் தெரியவந்தது.

மேலும் செய்திகள்