திருச்சி அருகே ‘கஜா’ புயல் சீற்றத்தால் ஆட்டோ மீது மரம் விழுந்து டிரைவர் பலி

திருச்சி அருகே ‘கஜா’ புயல் சீற்றத்தால் ஆட்டோ மீது மரம் விழுந்ததில் அதன் டிரைவர் பலியானார். மற்றொரு இடத்தில் வீட்டுச்சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி இறந்தார். இதில் இடிபாடுகளில் சிக்கிஅவரது பேத்தியும் படுகாயம் அடைந்தார்.

Update: 2018-11-16 23:41 GMT
திருவெறும்பூர்,

திருச்சி மாவட்டத்தில் கஜா புயல் மற்றும் மழைக்கு 200-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. மேலும் பல இடங்களில் மரக்கிளைகள் ஒடிந்து விழுந்தன. இதனால், பல இடங்களில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாய்ந்த மரங்கள் உடனடியாக வெட்டி அப்புறப்படுத்தும் பணியும் நடந்தது.

மேலும் மழை, புயல் காரணமாக திருச்சி மாநகர் மற்றும் மாவட்ட முழுவதும் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 200-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்து சேதமானது. அவற்றை சீரமைக்கும் பணியில் தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தாலுகாவுக்குட்பட்ட நவல்பட்டு பர்மா காலனி பகுதியை சேர்ந்தவர் துரைசாமி(வயது 68). இவர், திருச்சியில் உள்ள துப்பாக்கி தொழிற்சாலையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பணி ஓய்வு பெற்ற பின்னர் சொந்தமாக ஆட்டோ வாங்கி சவாரிக்கு ஓட்டி வந்துள்ளார்.

திருச்சியில் நேற்று அதிகாலை முதலே சூறைக்காற்றுடன் மழை பெய்து கொண்டிருந்தது. இடைவிடாத மழையிலும் சவாரி ஓட்டினால்தான் பிழைப்பு நடத்த முடியும் என்ற நிலையில், காலை 8.30 மணிக்கு ஆட்டோவை எடுத்து கொண்டு வெளியே சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்ற மரம் ஒன்று வேரோடு சாய்ந்து ஆட்டோ மீது விழுந்து அமுக்கியது. இதில் துரைசாமி, ஆட்டோ டிரைவர் இருக்கையில் அமர்ந்தபடியே நசுங்கி உயிரிழந்தார். தகவல் அறிந்து போலீசார் விரைந்து வந்து மரத்தை வெட்டி அப்புறப்படுத்தி துரைசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து நவல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருவெறும்பூர்-கல்லணை சாலையில் 5-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாலையில் சாய்ந்து விழுந்தன. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பேரூராட்சி பணியாளர்கள் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினார்கள்.

மணப்பாறை அடுத்த வளநாடு பகுதியில் நேற்று காலை புயல் காற்றுடன் பலத்த மழை கொட்டியது. மணப்பாறை அடுத்த மறவப்பட்டியை சேர்ந்தவர் பொன்னையா. இவரது மனைவி சின்னாத்தாள்(70). மழை, புயல் காரணமாக சின்னாத்தாள் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் தனது பேத்தி சித்ராவுடன்(30) வீட்டிலேயே முடங்கினார்.

அப்போது மழை காரணமாக வீட்டின் ஒருபக்க சுவர் நனைந்து திடீரென இடிந்து விழுந்தது. அதன் இடிபாடுகளில் இருவரும் சிக்கிக்கொண்டனர். அவர்களில் சின்னாத்தாள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது பேத்தி சித்ரா படுகாயத்துடன் மணப்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தகவல் அறிந்ததும் வளநாடு போலீசார் விரைந்து வந்து சின்னாத்தாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்