‘கஜா’ புயலுக்கு தாக்குபிடிக்காமல் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் சூரியஒளி மின்தகடுகள் பறந்தன: 1 லட்சம் மரங்கள்-மின்கம்பங்கள் சாய்ந்தன

‘கஜா’ புயலுக்கு தாக்குபிடிக்காமல் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் சூரியஒளி மின்தகடுகள் பறந்தன. 1 லட்சம் மரங்கள்-மின்கம்பங்கள் சாய்ந்தன.

Update: 2018-11-16 23:41 GMT
தஞ்சாவூர்,

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘கஜா’ என பெயரிடப்பட்டிருந்தது. தமிழகத்தையே மிரட்டி கொண்டிருந்த இந்த புயல் நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே நேற்று முன்தினம் நள்ளிரவில் கரையை கடந்தது. தஞ்சை மாவட்டத்திற்குள் அதிராம்பட்டினம் வழியாக 111 கிலோமீட்டர் வேகத்தில் கஜா புயல் நுழைந்தது. இதனால் பலத்த காற்று வீசியதுடன் கனமழையும் பெய்தது.

காற்றுக்கு தாக்குபிடிக்காமல் தஞ்சை வண்டிக்காரத்தெருவில் கடைகளுக்கு முன்பு நிழலுக்காக தகரத்தால் போடப்பட்டிருந்த தகரம் பறந்தன. அந்த நேரத்தில் சாலையில் வாகனங்கள் எதுவும் செல்லாததால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

இதேபோல காந்திசாலை, புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட நகரில் பல்வேறு பகுதியில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகளும் கீழே விழுந்தன.

தஞ்சை எம்.கே.மூப்பனார்சாலை, நீதிமன்றசாலை, வல்லம்நம்பர்-1 சாலை, புதிய வீட்டுவசதிவாரிய குடியிருப்பு, பூக்காரத்தெரு, நாஞ்சிக்கோட்டை, யாகப்பாநகர், தஞ்சை-திருச்சி சாலை உள்ளிட்ட ஏராளமான இடங்களில் நின்றிருந்த மரங்கள் சாய்ந்தன. தஞ்சை கலெக்டர் அலுவலகம், மகளிர் போலீஸ் நிலையம், மாவட்ட தொழில் மையம், உழவர் சந்தை, அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், ராஜராஜசோழன் சிலை பூங்கா போன்றவற்றில் நின்ற மரங்களும் சாய்ந்திருந்தன. தஞ்சை பெரியகோவிலில் வராகிஅம்மன் சன்னதி முன்பு கொன்றை பூ மரம் நின்றது. மிகவும் பழமைவாய்ந்த இந்த மரம், பலத்த காற்றினால் சாய்ந்தது. தஞ்சை மாவட்டம் முழுவதும் சுமார் 1 லட்சம் மரங்கள் சாய்ந்துள்ளன.

மின்கம்பிகள் மீது மரங்கள் விழுந்ததால் ஆங்காங்கே மின்கம்பங்களும் கீழே விழுந்தன. இதனால் தஞ்சை மாவட்டம் முழுவதும் மின்வினியோகம் துண்டிக்கப்பட்டது. கீழே விழுந்த மரங்களை பணியாளர்கள் உடனே எந்திரங்கள் உதவியுடன் துண்டு, துண்டாக்கி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

சாலைகளில் மரங்கள் கிடந்ததால் தஞ்சையில் இருந்து பட்டுக்கோட்டை, வேதாரண்யம், மன்னார்குடி, திருவாரூர், நாகை, கும்பகோணம், மயிலாடுதுறை பகுதிகளுக்கு நேற்றுமுன்தினம் மாலை 6 மணி முதல் பஸ்கள் இயக்கப்படவில்லை. கரந்தையில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனையில் பஸ்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. தனியார் பஸ்களும் இயக்கப்படவில்லை. தஞ்சை நகரில் ஒரு சில டவுன் பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் நேற்று அதிகஅளவில் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

மதியத்திற்கு பிறகு தஞ்சை-கும்பகோணம் இடையே ஓரிரு பஸ்கள் இயக்கப்பட்டன. சாலைகளில் மரங்கள் விழுந்து கிடந்ததால் தஞ்சை-மன்னார்குடி, தஞ்சை-பட்டுக்கோட்டை இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலையோரம் வாகனங்கள் வரிசையாக காத்திருந்தன. சாலைகளில் கிடந்த மரங்கள் அப்புறப்படுத்தப்பட்ட பின்னர் நேற்றுமாலை முதல் போக்குவரத்து தொடங்கியது.

தஞ்சையில் இருந்து மன்னார்குடிக்கு நேற்றுமாலை 5.30 மணிக்கு மேல் பஸ்கள் இயக்கப்பட்டன. அதேபோல பட்டுக்கோட்டையில் இருந்து தஞ்சைக்கு மாலை 6 மணிக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. சுமார் 24 மணிநேரத்திற்கு பிறகு போக்குவரத்து சீரானது. தஞ்சை நகரில் ஓரிரு கடைகளை தவிர மற்ற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. காமராஜர் மார்க்கெட், உழவர் சந்தையும் அடைக்கப்பட்டன.

தஞ்சையை அடுத்த திருவையாறு, அரசூர் பகுதியில் ஏராளமான வாழை மரங்கள் சாய்ந்தன. பிள்ளையார்பட்டியில் விதை கரும்புகள் நடப்பட்டுள்ளன. காற்றின் வேகத்திற்கு தாக்குப்பிடிக்காமல் விதை கரும்புகள் எல்லாம் சாய்ந்தன. சூரியஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பதற்காக தஞ்சை கலெக்டர் அலுவலக மாடியில் மின்தகடுகள் பதிக்கப்பட்டுள்ளன. இந்த மின்தகடுகள் எல்லாம் காற்றின் வேகத்திற்கு தாக்குபிடிக்காமல் பறந்து சென்றன. இவற்றை சீரமைக்கும் பணியில் பணியாளர்கள் உடனே ஈடுபட்டனர்.

கஜா புயல் காரணமாக திருச்சிற்றம்பலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் சாய்ந்து விழுந்தன. அதேபோல திருச்சிற்றம்பலம் கடைவீதியில் உள்ள செல்போன் கோபுரம் சாய்ந்து விழுந்தது. திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள பழமையான 2 அரச மரங்கள் அடியோடு சாய்ந்து விழுந்தன. இந்த மரங்கள் புதிதாக அமைக்கப்பட்ட தேரின் மேல் கூரையின் மேல் விழுந்தன. இதனால் தேரின் மேற்கூரை முற்றிலும் சேதமடைந்தது. ஆதலால் தற்போது தேர் திறந்த நிலையில் நிற்கிறது.

அதேபோல திருச்சிற்றம்பலம் பகுதியில் உள்ள மின்கம்பங்கள், மின்மாற்றிகள் அனைத்தும் முழுவதுமாக சாய்ந்தன. இதனால் திருச்சிற்றம்பலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் முழுவதும் துண்டிக்கப்பட்டது. திருச்சிற்றம்பலம் மேற்கு பகுதியில் உள்ள பழமையான ஆலமரம் சாய்ந்து விழுந்தது. செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் வளாகத்தில் உள்ள மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் மருத்துவமனைக்கு செல்ல முடியாத நிலை நிலவுகிறது. சாய்ந்து விழுந்த மின்கம்பங்களை அகற்றி விட்டு, புதிய மின்கம்பங்களை விரைவில் அமைத்து திருச்சிற்றம்பலம் பகுதிகளில் தடையின்றி மின்சாரம் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கை ஆகும்.

மேலும் செய்திகள்