தூத்துக்குடியில் கூட்டுறவு வாரவிழா: பயனாளிகளுக்கு ரூ.2¾ கோடி கடன் உதவி கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்

தூத்துக்குடியில் நடந்த கூட்டுறவு வாரவிழாவில் 459 பயனாளிகளுக்கு ரூ.2¾ கோடி கடன் உதவியை கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.

Update: 2018-11-20 21:30 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் நடந்த கூட்டுறவு வாரவிழாவில் 459 பயனாளிகளுக்கு ரூ.2¾ கோடி கடன் உதவியை கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.

கூட்டுறவு வாரவிழா

தூத்துக்குடியிலுள்ள தனியார் மண்டபத்தில் 65-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி 459 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 86 லட்சம் கடன் உதவி, 34 சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயம், கலை இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளையும் வழங்கினார். தூத்துக்குடி, நெல்லை ஆவின் தலைவர் என்.சின்னத்துரை முன்னிலை வகித்தார்.

விழாவில் கலெக்டர் பேசியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் 633 கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. அதில் 150 தொடக்க கூட்டுறவு வேளாண்மை சங்கங்கள் உள்ளன. 2018-2019ஆம் ஆண்டு அக்டோபர் வரை 8 ஆயிரத்து 256 விவசாயிகளுக்கு பயிர் கடனாக ரூ.66 கோடி கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு கடன் தள்ளுபடி திட்டத்தில் 4 ஆயிரத்து 701 சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.38 கோடியும், 315 புதிய விவசாயிகளுக்கு ரூ.3 கோடியே 30 லட்சம் பயிர் கடன் வழங்கப்பட்டு உள்ளது.

பண்ணை பசுமை காய்கறி கடையில் தினமும் ரூ.1 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பிலான காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த அக்டோபர் மாதம் வரை ரூ.21 கோடியே 48 லட்சம் அளவுக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் உள்ள 3 அம்மா மருந்தகங்கள் மூலம் மருந்துகளுக்கு 15 சதவீதம் முதல் சில மருந்துகளுக்கு 60 சதவீதம் வரை தள்ளுபடியில் மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

விழாவில் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட மீனவ கூட்டுறவு இணையத் தலைவர் சேவியர், பனைவெல்ல கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், தூத்துக்குடி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அருளரசு, தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணை பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குனர் இந்துமதி, கோவில்பட்டி நில வள வங்கி தலைவர் ரமேஷ், தூத்துக்குடி சரக துணைப்பதிவாளர் சிவகாமி, திருச்செந்தூர் நகர கூட்டுறவு வங்கி துணைப்பதிவாளர் சந்திரா, மீன்வளத்துறை உதவி இயக்குநர் பாலசரசுவதி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக விழாவையொட்டி அமைக்கப்பட்டு இருந்த ஆவின் பொருள் விற்பனை மையத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

மேலும் செய்திகள்