மன்னார்குடி அருகே சாலையின் குறுக்கே மரங்களை போட்டு பொதுமக்கள் மறியல்

மன்னார்குடி அருகே சாலையின் குறுக்கே மரங்களை போட்டு பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வட்டார வளர்ச்சி அலுவலரை சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-11-20 22:45 GMT
சுந்தரக்கோட்டை,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள சித்தேரியில் பொதுமக்கள் ஏராளமானோர் காலி குடங்களுடன் மன்னார்குடி-முத்துப்பேட்டை சாலைக்கு திரண்டு வந்தனர். கஜா புயல் தாக்கி 4 நாட்களாகியும் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை எனக் கூறி மரங்களை குறுக்கே போட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக முத்துப்பேட்டை புயல் நிவாரண பணிக்காக சென்று கொண்டிருந்த வலங்கைமான் வட்டார வளர்ச்சி அதிகாரி சண்முகத்தின் ஜீப்பை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை அறிந்த மன்னார்குடி வட்டார வளர்ச்சி அதிகாரி மற்றும் அலுவலர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விரைவில் குடி நீர் மற்றும் மின்சாரம் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதி அளித்தனர். அதனைத் தொடர்ந்து வலங்கைமான் வட்டார வளர்ச்சி அலுவலரை விடுவித்து முத்துப்பேட்டை செல்ல அனுமதித்தனர். பின்னர் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் மன்னார்குடி-முத்துப்பேட்டை சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல மன்னார்குடியை அடுத்த உள்ளிக்கோட்டையில் பொதுமக்கள் திரண்டு குடிநீர், மின்சார வசதி கேட்டு வடசேரி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அதிகாரிகளின் வாக்குறுதியை அடுத்து கலைந்து சென்றனர். இதனால் வடசேரி சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல மன்னார்குடியை அடுத்த மறவாக்காட்டில் பொதுமக்கள் குடிநீர், மின்சாரம் கேட்டு திருமக்கோட்டையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளின் பேச்சுவார்த்தை அடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் மன்னார்குடி-திருமக்கோட்டை சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்