பழனி, வேடசந்தூர் கல்வி மாவட்டங்களை சேர்ந்த 233 பகுதிநேர ஆசிரியர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு

பழனி, வேடசந்தூர் கல்வி மாவட்டங்களை சேர்ந்த 233 பகுதிநேர ஆசிரியர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன.

Update: 2018-11-20 21:45 GMT
திண்டுக்கல், 


தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு ஓவியம், உடற்கல்வி, இசை, தையல், கணினி பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காக கடந்த 2011-ம் ஆண்டு பகுதிநேர ஆசிரிய-ஆசிரியைகள் நியமிக்கப்பட்டனர். இந்த பகுதிநேர ஆசிரியர்கள் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். இதற்கிடையே பணிக்காக சிலர் போலி கல்வி சான்றிதழ்களை சமர்ப்பித்ததாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து மாநிலம் முழுவதும் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்களின் சான்றிதழ்களை சரிபார்க்கும்படி அரசு உத்தரவிட்டது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை 451 பகுதிநேர ஆசிரிய-ஆசிரியைகள் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களுக்கு திண்டுக்கல் நேருஜி நினைவு மேல்நிலைப்பள்ளியில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நேற்று தொடங்கியது.

முதல் நாளான நேற்று பழனி கல்வி மாவட்டத்தை சேர்ந்த 100 பேர், வேடசந்தூர் கல்வி மாவட்டத்தை சேர்ந்த 133 பேர் என மொத்தம் 233 ஆசிரிய-ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

இந்த சான்றிதழ் சரிபார்ப்பு பணிக்கு முதன்மை கல்வி அலுவலர் சாந்தகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர்கள் கருப்பையா, பிச்சைமுத்து மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களை கொண்ட 9 குழுவினர், பகுதிநேர ஆசிரியர்களின் சான்றிதழ்களை சரிபார்த்தனர்.

இதைத் தொடர்ந்து நாளை (வியாழக்கிழமை) திண்டுக்கல், வத்தலக்குண்டு கல்வி மாவட்டங்களை சேர்ந்த பகுதிநேர ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.

இதுதொடர்பான அறிக்கை வருகிற 28-ந்தேதிக்குள் ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குனருக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளது. 

மேலும் செய்திகள்