பண்ருட்டியில் வழிப்பறி: வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

பண்ருட்டியில் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2018-11-20 22:00 GMT
கடலூர், 

விழுப்புரம் மாவட்டம் சின்னமடம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன். இவருடைய மனைவி ஆதிலட்சுமி (வயது 55). இவர் கடந்த 20.9.2018 அன்று பகல் 11 மணி அளவில் பண்ருட்டி அருகே கண்டரக்கோட்டை பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென கத்தியை காட்டி, ஆதிலட்சுமியின் செல்போனை பறித்து சென்றனர்.

இதையடுத்து பண்ருட்டி எல்.என்.புரம் எடைமேடை அருகே நடந்து சென்ற அதேபகுதியை சேர்ந்த சிவசங்கர் மனைவி நந்தினி(28) என்பவரிடம் அவர்கள் 2 பேரும் 5 பவுன் செயினை பறித்து சென்றனர். இது தொடர்பாக ஆதிலட்சுமி, நந்தினி ஆகிய 2 பேரும் பண்ருட்டி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் அவர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டது சென்னை வியாசர்பாடி 5-வது குறுக்கு தெருவை சேர்ந்த முனியாண்டி மகன் அருண்குமார் (23), அவரது நண்பர் நவீன்குமார் ஆகிய 2 பேர் என்று தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதில் கைதான அருண் குமார் மீது சென்னை கொடுங்கையூர், எம்.கே.பி.புரம் ஆகிய போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. இவரின் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் விதமாக, அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

அதன்பேரில் அருண் குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் அன்புசெல்வன் உத்தரவிட்டார். இதையடுத்து அருண்குமாரை பண்ருட்டி போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து, அதற்கான உத்தரவு நகலை கடலூர் மத்திய சிறையில் இருக்கும் அவரிடம் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கினர்.

மேலும் செய்திகள்