விழுப்புரம் அருகே: அரசு பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு

விழுப்புரம் அருகே அரசு பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2018-11-20 22:15 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் அருகே பஞ்சமாதேவி ஊராட்சியில் நேற்று காலை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள ரேஷன் கடையில் பொருட்கள் இருப்பு, தரம் குறித்து பார்வையிட்டார். மேலும் பதிவேடுகளை சரிபார்த்ததோடு விலை பட்டியல், தகவல் பலகை உள்ளிட்டவற்றையும் ஆய்வு செய் தார். அதனை தொடர்ந்து பொது வினியோக திட்டத்தின் கீழ் அனைத்து அத்தியாவசிய பொருட்களும் தரமாகவும், சரியான எடையில் வழங்கப்படுகிறதா? என்று பொதுமக்களிடம் கலெக்டர் சுப்பிரமணியன் கேட்டறிந்ததோடு, மாதந்தோறும் பொது வினியோக திட்ட பொருட்களை வாங்கி பயனடைய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

அதன் பிறகு பஞ்சமாதேவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களின் வருகைப்பதிவேடு, மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவிற்கு தேவையான பொருட்களின் இருப்பு குறித்து கலெக்டர் சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்படுவதற்காக தயாரித்து வைக்கப்பட்டிருந்த மதிய உணவை சாப்பிட்டு பார்த்து அதன் தரத்தை பரிசோதித்தார். மேலும் அங்கிருந்த சமையலரிடம் சுகாதாரமாகவும், சுத்தமாகவும் உணவு வகைகளை தயாரித்து மாணவர்களுக்கு வழங்கவேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சுந்தரேசன் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்