இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம்

இடைநிலை ஆசிரியர் களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்று ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2018-11-21 22:30 GMT
நாமக்கல்,

புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்தமாதம் (டிசம்பர்) 4-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்த போவதாக ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நாமக்கல்லில் நடந்தது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திர பிரசாத் தலைமை தாங்கினார். மற்றொரு ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் வரவேற்று பேசினார். ஜாக்டோ-ஜியோ உயர்மட்டக்குழு உறுப்பினர் ராமு முன்னிலை வகித்து பேசினார். இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ரவீந்திரன், பூபதி மற்றும் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் மற்றும் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் சிறப்பு ஆசிரியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் வருகிற 30-ந் தேதி நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது. முடிவில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகதீசன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்