பெலகாவி கூட்டத்தொடருக்கு முன்பாக கரும்பு விவசாயிகளின் பிரச்சினையை தீர்க்க குமாரசாமிக்கு தேவேகவுடா உத்தரவு

பெலகாவி கூட்டத்தொடருக்கு முன்பாக கரும்பு விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வுகாணும்படி முதல்-மந்திரி குமாரசாமிக்கு தேவேகவுடா உத்தரவிட்டுள்ளார்.

Update: 2018-11-21 22:30 GMT
பெங்களூரு, 

பெலகாவி கூட்டத்தொடருக்கு முன்பாக கரும்பு விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வுகாணும்படி முதல்-மந்திரி குமாரசாமிக்கு தேவேகவுடா உத்தரவிட்டுள்ளார்.

தேவேகவுடாவுடன் ஆலோசனை

சர்க்கரை ஆலைகளின் உரிமையாளர்களிடம் இருந்து நிலுவைத்தொகையை பெற்றுக் கொடுக்கும்படி கரும்பு விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதையடுத்து, நேற்று முன்தினம் கரும்பு விவசாயிகள் மற்றும் சர்க்கரை ஆலைகளின் உரிமையாளர்களுடன் முதல்-மந்திரி குமாரசாமி நடத்திய ஆலோசனையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்த பிரச்சினையை பா.ஜனதாவினர் கையில் எடுத்துள்ளனர்.

இந்த நிலையில், பெங்களூரு பத்மநாபநகரில் உள்ள ஜனதாதளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவரும், தனது தந்தையுமான தேவேகவுடாவின் வீட்டிற்கு நேற்று முன்தினம் இரவு முதல்-மந்திரி குமாரசாமி சென்றார். அப்போது கரும்பு விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து தேவேகவுடாவுடன் அவர் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

பிரச்சினைக்கு தீர்வுகாணும்படி...

அப்போது கரும்பு விவசாயிகளின் பிரச்சினைக்கு அடுத்த மாதம் (டிசம்பர்) 10-ந் தேதி பெலகாவி சுவுர்ணசவுதாவில் தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடருக்கு முன்பாக தீர்வுகாணும்படி முதல்-மந்திரி குமாரசாமிக்கு தேவேகவுடா உத்தரவிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக சர்க்கரை ஆலைகளின் உரிமையாளர்களிடம் இருந்து கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகையை பெற்றுக் கொடுக்கும்படியும் தேவேகவுடா கூறி இருப்பதாக தெரிகிறது.

ஏற்கனவே கரும்பு விவசாயிகளின் பிரச்சினையை பா.ஜனதாவினர் கையில் எடுத்துள்ளதால், அந்த பிரச்சினையை குளிர்கால கூட்டத்தொடரில் எழுப்பி அரசுக்கு நெருக்கடி கொடுக்க முயற்சிக்கலாம் என்பதால், குமாரசாமிக்கு தேவேகவுடா உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அத்துடன் விவசாயிகளின் பிரச்சினைகளில் கவனம் செலுத்தும்படியும் குமாரசாமிக்கு தேவேகவுடா சில அறிவுரைகளை வழங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் செய்திகள்