கேரள அரசை கண்டித்து சபரிமலை பாதுகாப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோவையில் கேரள அரசை கண்டித்து சபரிமலை பாதுகாப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

Update: 2018-11-21 22:00 GMT
கோவை,

சபரிமலை பாதுகாப்பு இயக்கம் சார்பில் கேரள அரசை கண்டித்து கோவை காந்திபார்க்கில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு வக்கீல் லட்சுமி நாராயணன் தலைமை தாங்கினார். அய்யப்பா பூஜா சங்கத்தை சேர்ந்த ஜெய்ஹிந்த் முரளி முன்னிலை வகித்தார். பாலகிருஷ்ணன் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணியை சேர்ந்த குணா, பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த எஸ்.ஆர்.சேகர் மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் கலந்து கொண்டு பேசியதாவது:-

இரு முடியேந்தி சபரிமலைக்கு தரிசனம் செய்ய கூட்டம் கூட்டமாக வருகிற அய்யப்ப பக்தர்களின் நம்பிக்கையையும், மரபுகளையும் தகர்த்தெறிந்து, அவர்களுடைய வழிபடும் உரிமையை கேள்விக்குறியாக்கி நிஜமான மனிதஉரிமை மீறல் நடத்தி உள்ளது கேரள காவல்துறை. ஆட்சியே பறிபோனாலும் பரவாயில்லை, இளம் பெண்களை எப்படியாவது சபரிமலையில் தரிசனத்திற்கு அழைத்து செல்வதே அரசின் முதல் பணி என செயல்படுகிறார் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன்.

பக்தர்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து சுப்ரீம் கோர்ட்டு, மறுபரிசீலனை கோரி தாக்கல் செய்த மனுக்களை ஏற்றுக்கொண்டது. ஆனால், அதற்கு முன்பு சுப்ரீம்கோர்ட்டு வழங்கிய பல்வேறு தீர்ப்புகளையும் கண்டுகொள்ளாமல் கிடப்பில் போட்டு சாக்குபோக்கு கூறிய கேரள அரசு, அய்யப்ப பக்தர்களின் உணர்வுகளுக்கு எந்த மதிப்பும் கொடுக்காமல், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அமல் படுத்துவோம் என கூறிக்கொண்டு அசுரவேகத்தில் செயல்பட துடிக்கிறது.

தற்போது மண்டல மகர ஜோதி விழாவிற்காக கோவில் நடை திறந்தது முதல் நிலக்கல், பம்பை மற்றும் சன்னிதானத்தில் 144 தடை உத்தரவை கேரள அரசு அறிவித்துள்ளது. அய்யப்ப பக்தர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இந்த செயல்கள் அனைத்தும் பெரும் கண்டனத்திற்குரியதாகும். அங்கு பக்தர்களின் உரிமைகள் பறிபோய் விட்டன.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்