ராணுவத்துக்கு ஆட்கள் தேர்வு: கோவையில் வடமாநில இளைஞர்கள் குவிந்தனர் - சாலையோரம் படுத்து உறங்கும் அவலம்

கோவையில் ராணுவத்துக்கு ஆட்கள் தேர்வு இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இதில் பங்கேற்க வடமாநிலங்களில் இருந்து கோவையில் இளைஞர்கள் குவிந்து உள்ளனர். அவர்கள் போதிய இடவசதி இல்லாமல் சாலையோரம் படுத்து உறங்கும் அவலம் ஏற்பட்டு உள்ளது.

Update: 2018-11-21 21:45 GMT
கோவை, 

ராணுவத்தில், வீரர்கள், கிளார்க், சமையலர் என்று மொத்தம் 37 இடங்களுக்கு ஆட்கள் தேர்வு இன்று (வியாழக்கிழமை) கோவை மாநகர போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடக்கிறது. இதில் பங்கேற்க தகுதியானவர்கள் அதிகாலை 5 மணிக்கு மைதானத்துக்குள் இருக்க வேண்டும் என்றும், அதன் பின்னர் வருபவர்கள் உள்ளே அனுமதிக் கப்பட மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த தேர்வில் பங்கேற்பவர்களுக்கு முதலில் உடற்தகுதி தேர்வும், அதன் பின்னர் ஓட்டப்பந்தயமும், பிறகு எழுத்து தேர்வும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ராணுவ அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

இதில் பங்கேற்பதற்காக வடமாநிலங்களை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் 2 நாட்களுக்கு முன்பாகவே கோவைக்கு வந்து விட்டனர். அவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், தங்க போதிய இடம் கிடைக்கவில்லை. எனவே அவர்கள் போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தை சுற்றிலும் சாலை ஓரம் மற்றும் வ.உ.சி. மைதானம் அருகே சாலை ஓரத்தில் தங்கும் அவலம் ஏற்பட்டு உள்ளது.

இந்த தேர்வில் பங்கேற்க 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வருவார்கள் என்பதால் அசம்பாவித சம்பவங்கள் நடப்பதை தடுக்க மாநகர போலீஸ் துணை கமிஷனர் பாலாஜி சரவணன் மேற்பார்வையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இது ஒரு புறம் இருக்க தேர்வுக்கு வந்து இருக்கும் இளைஞர்களுக்கு போதிய இடவசதி செய்து கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இது குறித்து கோவையை சேர்ந்தவர்கள் கூறியதாவது:-

கோவையில் போலீஸ் மற்றும் ராணுவத்துக்கு ஆட்கள் சேர்க்க தேர்வு நடக்கும்போது எல்லாம் இதுபோன்ற நிலைதான் உள்ளது. கும்பல் கும்பலாக இளைஞர்கள் பலர் சாலை ஓரத்தில் படுத்து கிடப்பதை பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது. இந்த இளைஞர்கள் தங்க திருமண மண்டபத்தை ஏற்பாடு செய்து கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும்.
இவ்வாறு திறந்த வெளியில் இளைஞர்கள் படுத்து கிடப்பதால் அவர்கள் கொண்டு வந்துள்ள பொருட்கள் மற்றும் சான்றிதழ்கள் திருடுபோக வாய்ப்பு உள்ளது. குறிப்பாக அவினாசி ரோட்டின் ஓரத்தில் ஏராளமான இளைஞர்கள் இரவு நேரத்தில் படுத்து உறங்குகிறார்கள்.

இந்த ரோட்டில் இரவு நேரத்தில் கார்கள் அதிவேகமாக செல்கின்றன. அப்போது விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இனியாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இதுபோன்று தேர்வுக்காக வரும் இளைஞர்களுக்கு தங்குவதற்கு போதிய இடவசதி செய்து கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்