ஆலங்குளம் அருகே மாற்றுத்திறனாளி கொலையில் தொழிலாளி கைது பரபரப்பு வாக்குமூலம்

ஆலங்குளம் அருகே மாற்றுத்திறனாளி கொலையில் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

Update: 2018-11-21 22:45 GMT
ஆலங்குளம், 

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள பூலாங்குளத்தை சேர்ந்தவர் சுப்பையா என்ற குமரேசன் (வயது 52). பார்வையற்றவரான இவர், டாஸ்மாக் இல்லாத நேரங்களில் மது வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தார். இந்த நிலையில் இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 9-ந் தேதி அங்குள்ள கடை முன்பாக தலை சிதைந்த நிலையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கொலையாளியை தேடி வந்தனர். கொலை வழக்கில் தகவல் ஏதும் கிடைக்காததால் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் தலைமையில் போலீசார் தனிப்படை அமைத்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.


போலீசாரின் விசாரணையில் அதே ஊர் காளியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த சமையல் தொழிலாளி சுடலைமணி (45) என்பவர் குமரேசனை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையின் போது, அவர் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

குமரேசனிடம், வீட்டு செலவுக்காக நான் பணம் கேட்டேன். அதற்கு என்னையும், எனது குடும்பத்தை பற்றியும் குமரேசன் அவதூறாக பேசினார். இதனால் எனக்கும், அவருக்கும் ஏற்பட்ட தகராறின் காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் நான் சம்பவத்தன்று மது வாங்க சென்றேன். அப்போது அங்குள்ள ஒரு கடை முன்பாக குமரேசன் தூங்கி கொண்டிருந்தார். இதனை பார்த்ததும் அவர் மீது இருந்துள்ள கோபத்தில் தூங்கி கொண்டிருந்த குமரேசன் மீது கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்தேன். பின்னர் கோவைக்கு தப்பிச் சென்று அங்கு சமையல் தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்தேன். தற்போது விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தபோது போலீசார் என்னை கைது செய்துவிட்டனர்.

இவ்வாறு சுடலைமணி கூறினார்.

இதையடுத்து போலீசார் சுடலைமணியை கைது செய்து, ஆலங்குளம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்