கேரள அரசை கண்டித்து இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களையும் கேரள அரசு அனுமதிப்பதை கண்டித்து நேற்று மாலை திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2018-11-21 22:45 GMT
மலைக்கோட்டை,

அனைத்து வயது பெண்களும் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லலாம் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை காரணம் காட்டி, அய்யப்ப பக்தர்களின் உணர்வுகளை புறந்தள்ளி விட்டு, அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களையும் கேரள அரசு அனுமதிப்பதை கண்டித்து நேற்று மாலை திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே ஆர்.எஸ்.எஸ். மண்டலத்தலைவர் செல்லத்துரை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மண்டல செயலாளர் செல்வம், தென்பாரத அமைப்பு செயலாளர் நாகராஜன், சமுதாய நல்லிணக்க பேரவை மாநில அமைப்பாளர் முருகானந்தம், மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் லீமா சிவக்குமார், மாவட்ட தலைவர் தங்க.ராஜையன், ராஜசேகர் உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள், ஆன்மிக சேவை அமைப்புகள், அய்யப்ப குருசாமிகள் மற்றும் பக்தர்கள், அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர். முன்னதாக அய்யப்ப சுவாமி படத்துக்கு மாலை அணிவித்து, பூஜை செய்தனர். பின்னர், கேரள மாநில அரசை கண்டித்தும், சபரிமலைக்கு மாலையணிந்து, விரதமிருந்து கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தையொட்டி கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்