கஜா புயலால் சேதம்: பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவ முன் வர வேண்டும் கலெக்டர் வேண்டுகோள்

கஜா புயலால் சேதமடைந்த பகுதிகளில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவ முன் வர வேண்டும் என கலெக்டர் ராஜாமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

Update: 2018-11-21 22:45 GMT
திருச்சி,

தமிழகத்தில் சுனாமி பேரலையால் ஏற்பட்ட சேதத்தின் போதும், தானே புயல் வந்தபோதும், அண்மையில் கேரளாவில் பெய்த பலத்த மழையின் போதும் பொதுமக்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு நம்மால் இயன்ற பொருள் உதவிகளை வாரி வாரி வழங்கி உள்ளோம். இந்த நிலையில் ‘கஜா‘ புயல் மழையினால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி போன்ற பல்வேறு மாவட்டங்களில் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை முழு வீச்சில் எடுத்து வருகிறது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள், வணிக நிறுவனங்கள், சமூக அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், வங்கிகள், பொதுத்துறை தனியார் நிறுவனங்கள் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதற்கு தாமாக முன்வர வேண்டும்.

பொதுமக்கள் தங்களால் முடிந்த உணவு பொருட்கள், உடைகள், மெழுகுவர்த்தி, தார்ப்பாய், போர்வைகள், மளிகை பொருட்கள் போன்றவற்றையும் வழங்கலாம். புயல் நிவாரண நிதியாக வழங்க முன்வருபவர்கள் கலெக்டரின் பெயரில் வங்கி வரைவோலையாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கும் பேரிடர் மேலாண்மை தாசில்தார் அலுவலரிடம் அளிக்கலாம்.

உதவி செய்ய முன்வருபவர்கள் திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் முதல் தளத்தில் இயங்கிவரும் பேரிடர் மேலாண்மை தாசில்தார் ஜவகரிடம் பொருட்களை ஒப்படைக்கலாம். மேலும் விவரங்களை 89036 00075 என்ற செல்போன் எண்ணிலும், கட்டணமில்லா தொலைபேசி எண் 1077-ஐயும் தொடர்பு கொண்டு பெறலாம்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்