உடனடியாக மின்சாரம் வினியோகிக்க கோரி தஞ்சை அருகே பொதுமக்கள் சாலை மறியல்

வீடுகளுக்கு உடனடியாக மின்சாரம் வினியோகிக்க கோரி தஞ்சை அருகே அற்புதாபுரம் புதுக்கோட்டை சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2018-11-21 22:45 GMT
தஞ்சாவூர்,

கஜா புயலால் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்து விழுந்தன. மின்கம்பிகளும் அறுந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு மின்கம்பங்கள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் பல பகுதிகளில் மின்கம்பங்கள் சீரமைக்கப்படவில்லை. குறிப்பாக கிராமப்புறங்களில் மின்கம்பங்கள் சீரமைக்கப்படாமல் உள்ளன. இதனால் மின்வசதி இல்லாமலும், குடிக்க தண்ணீர் இல்லாமலும் தஞ்சை அருகே உள்ள பல்வேறு கிராமங்களில் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் சாலைமறியலிலும் ஈடுபட்டு வருகின்றனர். தஞ்சை அருகே தங்கப்பன்உடையான்பட்டி பகுதியில் கஜா புயல் சேதத்தால் இதுவரை மின்கம்பங்கள் சீரமைக்கப்படவில்லை. மின்வாரிய அதிகாரிகளும் இந்தப்பகுதிக்கு வந்து பார்வையிட வரவில்லை. மேலும் அந்தப்பகுதியில் நிவாரணப்பணிகளும் நடைபெறவில்லை.

இந்தநிலையில், வீடுகளுக்கு உடனடியாக மின்சாரம் வினியோகிக்க கோரி தங்கப்பன்உடையான்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி மக்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை தஞ்சை-புதுக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

தஞ்சை-புதுக்கோட்டை சாலை போக்குவரத்து மிகுந்த பகுதியாகும். புதுக்கோட்டை செல்லும் அரசு, தனியார் பஸ்கள், சரக்கு வாகனங்கள் இந்த சாலையில் அதிகம் சென்றுவருகின்றன. இதனால் அந்தப்பகுதியில் போக்குவரத்து பாதித்தது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், மின்வாரிய அதிகாரிகள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களிடம் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். பின்னர் மின்வாரிய அதிகாரிகள் தங்கப்பன்உடையான்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் உடனே மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பொதுமக்களின் இந்த திடீர் மறியலால் நேற்று காலை தஞ்சை-புதுக்கோட்டை சாலையில் 2 மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதித்தது.

மேலும் செய்திகள்