ராஜீவ் கொலை வழக்கு கைதிகளை விடுவிக்க தயங்குவது ஏன்? - திராவிடர் விடுதலைக்கழக தலைவர் கொளத்தூர் மணி கேள்வி

ராஜீவ் கொலை வழக்கு கைதிகளை விடுவிக்க தயங்குவது ஏன் என திராவிடர் விடுதலைக்கழக தலைவர் கொளத்தூர் மணி கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2018-11-21 23:00 GMT
கடத்தூர்,

பஸ் எரிப்பு வழக்கில் 3 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் ராஜீவ் கொலை வழக்கு கைதிகளை அரசு விடுவிக்க தயக்கம் காட்டுவது ஏன்? என்று திராவிடர் விடுதலைக்கழக தலைவர் கொளத்தூர் மணி கேள்வி எழுப்பியுள்ளார்.

திராவிடர் விடுதலைக்கழக தலைவர் கொளத்தூர் மணி கோபிசெட்டிபாளையத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்திருந்தார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் சிறிது காலமாக ஆணவக்கொலைகள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தனிச்சட்டம் கொண்டு வரவேண்டும். கடந்த 2011-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த ஆணவக்கொலை சட்டம் அமல்படுத்தப்படவில்லை. மாநில அரசு தனிச்சட்டத்தை கொண்டு வந்து ஆணவக்கொலைகளை கட்டுப்படுத்த வேண்டும். தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் நேரடியாக குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை விடுதலை செய்துள்ள மாநில அரசு, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றத்துக்கு உடந்தையாக இருந்த 7 பேரை விடுதலை செய்ய தயக்கம் காட்டுவது ஏன்? என்று தெரியவில்லை.

அதனால் அந்த 7 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இதுதொடர்பாக தமிழக அரசு கவர்னருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை. தொடக்கத்தில் நிவாரணப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்பட்டது. இதனால்தான் அனைத்து கட்சியினரும் பாராட்டினார்கள். ஆனால் ஒருசில உள் கிராமங்களில் பணிகளில் தொய்வு ஏற்பட்டு உள்ளது.

தற்போது நிவாரணப்பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு அதிகாரிகள், கஜா புயல் பாதிப்புகளை முழுமையாக தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லவில்லை. அதனால்தான் நிவாரணப்பணிகள் நடைபெறாமல் உள்ளது.

இவ்வாறு கொளத்தூர் மணி கூறினார்.


மேலும் செய்திகள்