மதனபள்ளியில் ரூ.1¼ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் தந்தை–மகன் கைது

மதனபள்ளியில் ரூ.1 லட்சத்து 32 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-11-29 22:30 GMT
ஸ்ரீகாளஹஸ்தி, 

சித்தூர் மாவட்டத்தில் குட்கா போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மதனபள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் வேம்ப்பள்ளி வளைவு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது 2 பேர் பிளாஸ்டிக் பைகளுடன் நின்று கொண்டிருந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் 2 பேரையும் அழைத்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் மதனபள்ளி கம்ம கட்ட தெருவைச் சேர்ந்தவர் சுதாகர் (வயது 58), அவரது மகன் ரவிக்கிரண் (25) என்பதும், பிளாஸ்டிக் பைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது.

மேலும் கர்நாடக மாநிலம் சிந்தாமணியில் இருந்து குறைந்த விலைக்கு புகையிலை பொருட்களை வாங்கி கொண்டு வந்து மதனபள்ளியில் அதிக விலைக்கு விற்பனை செய்ய முயன்றதும் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து சுதாகர், ரவிக்கிரண் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 32 ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து தந்தையும், மகனையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மதனபள்ளி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்