கோவை அருகே சோளக்காட்டுக்கு சென்ற விவசாயியை துரத்திய காட்டுயானை

கோவை அருகே சோளக்காட்டுக்கு சென்ற விவசாயியை காட்டுயானை துரத்தியது. இதனால் அவர் தலைதெறிக்க ஓடி தப்பினார்.

Update: 2018-12-01 22:30 GMT

துடியலூர்,

கோவையை அடுத்த துடியலூர் கதிர்நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் மகேந்திரராஜ் (வயது60). விவசாயி. நேற்று முன்தினம் மாலை இவர் மாடுகளுக்கு சோளத்தட்டை அறுத்துவர சோளக்காட்டுக்கு சென்றார். அப்போது நடுக்காட்டுக்குள் கருத்த உருவம் இருப்பதை பார்த்தார். சற்று அருகே சென்று பார்த்த போது ஒரு காட்டுயானை சோளப்பயிர்களை மேய்ந்து கொண்டிருந்தது தெரியவந்தது.

இந்த நிலையில் ஆள் நடமாட்டத்தை கவனித்த அந்த யானை பிளிரத்தொடங்கியது. மேலும் அவரை துரத்தியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அங்கிருந்து தப்பித்தால் போதும் என்று தலை தெறிக்க ஓட்டம் பிடித்தார். இது குறித்து உடனே அவர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் வனவர் மகாதேவன் தலைமையில் வேட்டைத்தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அந்த யானையை பட்டாசு வெடித்தும், சத்தம் எழுப்பியும் அங்கிருந்து விரட்டினர். ஆனால் அந்த யானை அங்கேயே சுற்றி, சுற்றி வந்தது. இதனால் விடிய, விடிய விரட்டும் பணி நடந்தது.

இந்த நிலையில் அந்த யானை சோளக்காட்டில் இருந்து அருகில் உள்ள பகுதிக்கு சென்றது. இதனால் அங்குள்ள பொதுமக்கள் பீதிஅடைந்தனர். இருந்தபோதிலும் வனத்துறையினர் அதனை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அந்த யானை கஸ்தூரிநாயக்கன்பாளையம் புதூர் வழியாக பொன்னூத்து மலைக்கு சென்றது.

இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், தற்போது பெய்தமழை காரணமாக சோளப்பயிர்கள் நன்கு விளைந்துள்ளன. ஆகவே அதனை சாப்பிடுவதற்காக காட்டு யானைகள் வருகின்றன. அவற்றை கும்கியானைகளை கொண்டு விரட்டும்போதும் பலனில்லாத நிலையே உள்ளது. ஆகவே பொதுமக்கள் யானைகளை கண்டால் கல்வீசி தாக்குதல், அருகில் செல்லுதல் போன்ற நடவடிக்கைளை கைவிட வேண்டும். உடனே வனத்துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்