சிரமம் தரும் சிறுநீரக கல்

சிறுநீரக கல் பிரச்சினையால் அவதிப்படுகிறவர்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

Update: 2018-12-09 11:45 GMT
 சமீபத்தில் தெலுங்கானாவை சேர்ந்த ஒருவரிடம் இருந்து உருளைக்கிழங்கு அளவில் சிறுநீரககல் அகற்றப்பட்டுள்ளது.

சிறுநீரக கல் பாதிப்புக்கு ஆளாகாமல் இருப்பதற்கு அதிக அளவில் தண்ணீர் பருக வேண்டும். அதோடு பழ ஜூஸ்வகைகள், எலுமிச்சை சாறு, இளநீர் போன்றவைகளையும் பருக வேண்டும். அவை சிறுநீரக கல் உருவாகுவதை தவிர்க்க உதவும்.

கால்சிய சத்து கொண்ட உணவுகளை குறைவாக உட்கொள்வதும் சிறுநீரக கல் பிரச்சினை ஏற்பட வழிவகுக்கும். கால்சிய உணவுகளை தவிர்க்கும்போது உடலில் ஆக்சலேட் எனும் உப்புச்சத்து அதிகரிக்க தொடங்கி, சிறுநீரக கற்கள் உற்பத்தியாக வழிவகுத்துவிடும். அதை தவிர்க்க சோயா பால், தயிர், பாதாம், சூரியகாந்தி விதைகள் உள்ளிட்ட கால்சியம் நிறைந்த உணவுகளை சாப்பிடலாம். அதேநேரத்தில் சாக்லேட், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, காபி, வேர்க்கடலை போன்றவற்றில் ஆக்சலேட் அதிகம் கலந்திருக்கும். ஆதலால் அவற்றை அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

உப்பு அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளையும் தவிர்க்க வேண்டும். அதற்கு மாற்றாக புதினா, துளசி, மிளகாய் போன்றவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும். புரத சத்து உடலுக்கு அவசியமானது. எனினும் புரதம் கலந்த மாமிச உணவுகளை அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அவற்றில் அமிலத்தன்மையும், யூரிக் அமிலமும் அதிகம் சேர்ந்திருக்கும். அவை சிறுநீரக கற்கள் தோன்றுவதற்கு வழிவகுக்கும். ஆதலால் சிறுநீரக கற்கள் பாதிப்புக்கான அறிகுறி உள்ளவர்கள் மாட்டிறைச்சி, கோழி, மீன், பன்றி இறைச்சி போன்றவைகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

மேலும் செய்திகள்