தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே குப்பை கிடங்காக மாறிய மாநகராட்சி மைதானம்

தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே குப்பை கிடங்காக மாறிய மாநகராட்சி மைதானத்தில் கொட்டப்பட்ட மரக்கிளைகள், குப்பைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Update: 2018-12-09 22:30 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே 11 ஏக்கர் பரப்பளவில் மாநகராட்சிக்கு சொந்தமான மைதானம் உள்ளது. இந்த மைதானத்தில் அரசு பொருட்காட்சி, அரசு விழாக்கள், கட்சி விழாக்கள் மாநகராட்சி அலுவலகத்தில் முறையான அனுமதி பெற்று நடத்தப்பட்டு வந்தன. ஆனால் கடந்த சில மாதங்களாக எந்த விழாக்களும் நடத்தப்படாத காரணத்தினால் திறந்தவெளி மதுபான கூடமாக திகழ்ந்து வருகிறது.

புதிய பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுப்பாட்டில்களை வாங்கி வரும் பலர், இந்த மைதானத்தில் அமர்ந்து தான் மது குடிக்கின்றனர். பின்னர் பாட்டில்களை அப்படியே போட்டுவிட்டு செல்கின்றனர். மாநகராட்சி மைதானம் எந்தவித பராமரிப்பும் இன்றி காணப்படுகிறது. இந்தநிலையில் கஜா புயலால் தஞ்சை நகரில் ஏராளமான மரங்கள் சாய்ந்தன. பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.


இவற்றை எல்லாம் மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். இப்படி அப்புறப்படுத்தப்பட்ட மரக்கிளைகள், குப்பைகள் அனைத்தும் லாரிகளில் ஏற்றப்பட்டு மாநகராட்சி மைதானத்தில் கொட்டப்பட்டுள்ளது. தற்போது இந்த மைதானம் குப்பை கிடங்கு போல் காட்சி அளிக்கிறது. மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மன்னர் சரபோஜி அரசு கல்லூரி, பள்ளிக்கூடம், பஸ் நிலையம், குடியிருப்புகள் இந்த மைதானத்தை சுற்றிலும் அமைந்துள்ளன.

இங்கு குப்பைகள், மரக்கிளைகள் கொட்டப்பட்டு இருப்பதால் மழை காலங்களில் கொசுக்கள் உற்பத்தியாகி, தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. தஞ்சை ஜெபமாலைபுரம் அருகே உள்ள குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.

இந்தநிலையில் மாநகரில் சேகரிக்கப்பட்ட மரக்கிளைகள், குப்பைகளை ஏற்கனவே உள்ள குப்பை கிடங்கில் கொட்டாமல் மாநகராட்சி மைதானத்தில் கொட்டியிருப்பதால் இவற்றை நிரந்தர குப்பை கிடங்காக மாற்றும் முயற்சியா? என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே குப்பைகளை வேறு இடத்திற்கு அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்