ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் ஏரியில் கலக்கும் தொழிற்சாலை கழிவுநீர்; நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் தொழிற்சாலை கழிவுநீர் ஏரியில் கலக்கிறது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-12-09 22:45 GMT

ஸ்ரீபெரும்புதூர்,

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட நாவலூர் பகுதியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் ஏரி உள்ளது. சுமார் 350 ஏக்கர் பரப்பளவு உள்ள இந்த ஏரி நீரை பயன்படுத்தி சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடந்து வருகிறது. இது தவிர நாவலூர் பகுதிக்கு இந்த ஏரிநீர் முக்கிய நிலத்தடி நீர் ஆதரமாகவும் விளங்குகிறது.

இந்த நிலையில், பிள்ளைப்பாக்கம் பகுதியில் சிப்காட் தொழிற்பூங்கா தொடங்கப்பட்டதை தொடர்ந்து, பிள்ளைப்பாக்கம் மற்றும் நாவலூர் பகுதியில் ஏரிக்கு அருகில் சுமார் 20–க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதில் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் நாவலூர் ஏரியில் கலக்கிறது.

இதனால் ஏரி நீரின் தன்மை மாறி வருவதுடன் அவ்வப்போது மீன்களும் செத்து மிதக்கின்றன. இதனால் ஏரி நீரை பயன்படுத்தி விவசாயம் செய்ய முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

ஏரி நீர் மாசடைந்து வருவதால் எதிர்காலங்களில் இந்த பகுதியில் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும். எனவே ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்கவும், கழிவுநீரை கலக்கும் தொழிற்சாலைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்