எச்.ராஜாவை கைது செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்; 149 பேர் கைது

எச்.ராஜாவை கைது செய்யக்கோரி 3 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 149 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-12-16 00:30 GMT
புதுச்சேரி,

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனை பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் எச்.ராஜா விமர்சித்து இருந்தார். இதனை கண்டித்தும், எச்.ராஜாவை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று காலை புதுச்சேரி-விழுப்புரம் சாலையில் மூலக்குளத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். கட்சியின் உழவர்கரை தொகுதி செயலாளர் தீந்தமிழன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் அன்பரசன், விடுதலை வளவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இது பற்றி தகவல் அறிந்து ரெட்டியார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் மற்றும் போலீசார் அங்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் போராட்டத்தினை கைவிடவில்லை. இதனை தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 10 பெண்கள் உள்பட 65 பேரை கைது செய்தனர்.

தவளக்குப்பம் மெயின்ரோட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தொகுதி செயலாளர் வெண்மணி தலைமையில் மறியலில் ஈடுபட்டனர். சுடர்வளவன், இன்பதமிழன், புரட்சி வளவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில நிர்வாகிகள் அமுதவன், தமிழ்மாறன், தமிழ்வளவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது எச்.ராஜாவுக்கு எதிராக அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். அங்கு இருந்த தவளக்குப்பம் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு தெரிவித்தனர். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இதையொட்டி போலீசாருடன் லேசான தள்ளு-முள்ளு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட 60 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதேபோல் கிருமாம்பாக்கம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட 24 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்