நாகர்கோவிலில் இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் 10 பேர் கைது

நாகர்கோவிலில் கருப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியினர் 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-12-16 23:00 GMT
நாகர்கோவில்,

கேரள முதல்–மந்திரி பினராயி விஜயன், சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களிடம் மேற்கொள்ளும் கெடுபிடி நடவடிக்கைகளை கண்டித்தும், அவரின் சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் இந்து மக்கள் கட்சி சார்பில் நாகர்கோவில் வடசேரி அண்ணா சிலை அருகில் நேற்று காலை கருப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதற்கு மாவட்ட தலைவர் சுபா முத்து தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சரத்சுந்தர் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் வசந்தகுமார், இந்து கோவில்கள் கூட்டமைப்பு மாநில தலைவர் சிவபிரசாத் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆனால் இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே வடசேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சுபாமுத்து உள்பட 10 பேரை கைது செய்தனர். அவர்களில் 2 பேர் பெண்கள் ஆவர். கைது செய்யப்பட்ட அனைவரும் வடசேரி பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மாலையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்